செவ்வாய், 27 ஜூன், 2017

நல்லாடை அக்னீஸ்வரர் திருக்கோயில்

நல்லாடை அக்னீஸ்வரர் திருக்கோயில்


பெரிய யாகம் செய்யும்போது அதன் முடிவில் அழகான புடவை, அல்லது வேட்டியுடன் பழங்களும் அக்னிக்கு ஸ்வாஹா என்று அளிக்கப்படுகின்றன. நாம் அளிக்கும் அந்த ஆடை, குறிப்பிட்ட கடவுளிடம் போய்ச் சேர்ந்து விடுகிறதாம். இதைச் செய்யும் அக்னியின் பெயர் பரணி.

அக்னியில் பலவகை உண்டாம். அதில் பரணி எனும் ருத்ராக்னி நாம் அளிக்கும் எல்லாப் பொருட்களையும் இறைவனிடம் கொண்டு சேர்க்கிறது என்பது ஐதீகம். இந்த நம்பிக்கையைக் உறுதிப்படுத்தும் விந்தை அரங்கேறிய ஊர்தான் ‘நல்லாடை’. இங்கு இருக்கும் கோயிலில் அருள்புரிபவர் ஸ்ரீ அக்னீஸ்வரர்; இறைவியாய் விளங்குபவள் சுந்தரநாயகி. 

ஊரின் பெயர் நல்லாடை என்பதற்கான காரணம் 


மிருகண்டு மகரிஷிக்குச் சிவனை நோக்கி ஒரு பெரிய யாகம் செய்ய வேண்டி இருந்தது. அதற்காக, இந்தத் தலத்திற்கு வந்தார். யாகத்திற்கும் ஏற்பாடு செய்தார். பல சிவ பக்தர்கள் யாகத்திற்கு வந்து கூடினர். அவர்கள் மிருகண்டு ரிஷியிடம் "முனிவரே! யாகத்தின் புண்ணியம் எங்களுக்கும் கிடைக்க அருள்புரிய வேண்டும்" என்று வேண்டினர்.


"அப்படி என்றால் பக்தர்களே, யாகத்திற்கு வேண்டிய பொருட்களில் சில நீங்கள் வாங்கி அதில் பங்கு பெறுங்கள்" என்றார் மகரிஷி."அப்படியே செய்கிறோம். எங்களால் இயன்ற வரை பொருட்கள் வாங்கி வருகிறோம்" என்றனர் பக்தர்கள்.


அந்த பக்தர்களில் ஊரின் நெசவாளர்களும் இருந்தனர். அவர்கள் ஒன்று சேர்ந்து, தங்கச் சரிகை பின்னி மூன்று பட்டாடை நெய்தனர். அதில் ஒன்று இறைவனுக்கு, மற்றொன்று இறைவிக்கு, மூன்றாவது மகரிஷிக்கு என்று கொண்டு வந்து சேர்ப்பித்தனர்.


நாதஸ்வரத்துடன் ஹோமம் ஆரம்பமாகியது. பின், வேத கோஷங்கள் முழங்கப் பூஜை ஆரம்பமாயிற்று. முடிவில் மகரிஷி மிருகண்டு மூன்று பட்டாடைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அக்னியில் இட்டார். நெசவாளர்கள் ஒருவர்க்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டனர். ‘என்ன இது! நாம் இறைவன், இறைவிக்கு நெய்த ஆடைகளையும் அக்னியில் போட்டுவிட்டாரே!’ என்ற வருத்தம் அவர்களுக்கு மேலோங்கியது. ஒரு நெசவாளி தைரியமாய், "என்ன சுவாமி, நாங்கள் இறைவன், இறைவிக்கென்று செய்த ஆடைகளையும் தீயீட்டுக் கருக வைத்துள்ளீரே! இது நியாயமா? உங்களுக்கென்று அளித்ததை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமை உண்டு. ஆனால்………"


"ஏன் தம்பி முடிக்கவில்லை?" என்று புன்முறுவலுடன் கேட்ட மகரிஷி தொடர்ந்தார்."நான் யாககுண்டத்தில் இட்ட புடவையும் வேட்டியும் எங்கு போய்ச் சேர்ந்தன என்று தெரியுமா உங்களுக்கு? அவை வேறெங்கும் போகவில்லை. கருகிச் சாம்பலாகவும் இல்லை. அவை இறைவனுக்கும், இறைவிக்கும் போய்ச் சேர்ந்துவிட்டன.""எங்கே, நாங்கள் போய்ப் பார்க்கிறோம்" என்று அனைவரும் கர்ப்பகிரகத்திற்குச் சென்று பார்த்தனர். என்ன ஆச்சர்யம்! அந்த சிவலிங்கத்தில் நெசவாளர்கள் கொடுத்த பட்டாடை மிளிர்ந்தது.


அன்று முதல் இந்தக் கோயிலுக்கு ‘நல்லாடை’ என்ற பெயர் வந்தது. பரணி எனும் அக்னி பட்டாடைகளை இறைவனிடம் கொண்டு சேர்ப்பதனால் இந்தக் கோயில் பரணி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய கோயிலானது. ஆலயத்தின் தல விருட்சம் வில்வம். சுந்தரநாயகிக்கென்று தனி சந்நிதியும் உண்டு. 

சோழ மன்னர்கள் இந்தக் கோயிலைப் புதுப்பித்ததற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் நடந்த ஒன்று என்பதால் இது மிகப்பழமை வாய்ந்த கோயில் என்பது தெரிய வருகிறது. இதுவே குலோத்துங்க சோழபுரம் எனப்பட்டது. கோயிலுக்காக ஏராளமான நிலங்களும் வழங்கப்பட்டன.


இங்கு சிவராத்திரி, திருவாதிரை ஆகியவை மிகவும் விமரிசையாக நடக்கும். சித்திரை விசாகம் மிகவும் பெரிய அளவில் நடக்கும். கோயில், நடக்க நடக்க சென்றுகொண்டே இருக்கிறது; சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துள்ளது! மூன்று கோபுரங்கள், பெரிய பிராகாரங்கள் நம்மை அதிசயிக்க வைக்கின்றன. சிவலிங்கத்தைச் சுற்றி அகழி போல் நீர் இருந்து கொண்டே இருக்கிறது. சிவபெருமானைக் குளிர வைக்கும் நோக்கமாக இருக்கலாம்; பெயர் அக்னீஸ்வரர் ஆயிற்றே!இந்த நல்லாடை, திருக்கடையூர் அருகில் இருப்பதால், புகழ் பெற்ற திருக்கடையூர் அபிராமி கோயிலுக்குப் போகும் பக்தர்கள் இங்கும் போய் தரிசனம் செய்து அருள் பெற்று வரலாம்.

புதன், 14 ஜூன், 2017

மஹாளய அமாவாசை நாள் ஏன் முக்கிய நாளாக கருதப்படுகிறது?


மஹாளய அமாவாசை நாள் ஏன் முக்கிய நாளாக கருதப்படுகிறது?



முன்னோரை ஆராதிப்பதற்கு ஏற்ற மகாளய அமாவாசை!





ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது. ஆனால், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசையை நமது முன்னோர்கள் சிறப்பித்து வழிபட்டு வந்துள்ளனர். இவை அனைத்தையும் விட புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது. புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே 'மகாளய அமாவாசை' எனப்படுகிறது.


மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில் நீராடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்தால் நல்லது.


பல தெய்வீக நூல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. நாம் கலியுகத்தில் வாழ்வதால், அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர். இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.


இந்த பதினான்கு நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல், பழம் கொடுக்கலாம். ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எதுவும் செய்ய இயலாதவர்கள் முன்னோரின் பெயர்களை உச்சரித்து, "காசி காசி"  என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு கூட திதி பூஜையைச் செய்யலாம். பின்னர், பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.

மற்ற அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை, நாம் இந்த மஹாளய அமாவாசை தினத்தில் அறிந்துகொள்வதும் ஒரு வகையில் சிறப்புதான். அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம். 


மஹாளய என்றால் 'கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. பட்சம் என்றாகல், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மஹாளய பட்சம் என்று கூறுகிறோம். 


மஹாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது. மஹாளய பட்சத்தில் அனைத்து நாட்களுமே தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடன் தர்ப்பணம் செய்வது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். 


மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் பல்வேறு பலன்கள் நம்மைச் சேர்கின்றன. 1ம் நாள் - பிரதமை - செல்வம் சேரும் 2ம் நாள் - துவிதியை - பெயர் சொல்லும் குழந்தைகளைப் பெறலாம். 3ம் நாள் - திரிதியை - நினைத்த காரியங்கள் நிறைவேறும் 4ம் நாள் - சதுர்த்தி - பகையிலிருந்து எளிதில் விடுபடலாம். 5ம் நாள் - பஞ்சமி - அசையா சொத்துக்கள் மற்றும் செல்வம் பெருகும். 6ம் நாள் - சஷ்டி - பேரும், புகழும் தேடி வரும். 7ம்நாள் - சப்தமி - தகுதியான மற்றும் சிறந்த பதவிகள் கிடைக்கும். 8ம் நாள் - அஷ்டமி -அறிவு கூர்மை பெறும். 9ம் நாள் நவமி - நல்ல வாழ்க்கைத்துணை மற்றும் நல்ல குடும்ப சூழல் அமையும். 10ம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை உடனடியாக நிறைவேறும். 11ம் நாள் - ஏகாதசி - கல்வி, விளையாட்டு, கலைகளில் அசுர வளர்ச்சி கிடைக்கும். 12ம் நாள் - துவாதசி - ஆபரணங்கள் சேரும். 13ம் நாள் - திரயோதசி - விவசாயம் மற்றும் தொழில் செழிக்கும். தீர்க்காயுள் கிடைக்கும். 14ம் நாள் - சதுர்த்தசி - பாவம் கழியும். வாரிசுகளுக்கும் நன்மையே நடக்கும். 15ம் நாள் - மஹாளய அமாவாசை - அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும். 
இவ்வாறான சிறப்புக்களால்தான், தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. 


மஹாலக்ஷ்மிக்கு உகந்த வெள்ளிக்கிழமை விரதம்

 மஹாலக்ஷ்மிக்கு உகந்த  வெள்ளிக்கிழமை விரதம்!


ஒருசமயம் வைகுண்டத்தில் மஹாவிஷ்ணு பாம்பணையில் படுத்திருந்தார். மஹாலக்ஷ்மி அவருடைய கால்களைப் பிடித்துவிட்டுக்கொண்டிருந்தாள். அப்போது லக்ஷ்மிக்கு ஒரு சந்தேகம் வந்தது. படைப்பால் மனிதர்கள் எல்லோரும் சமம்தானே; அப்படியிருக்க, அவர்களுக்கிடையே ஏன் ஏற்றத்தாழ்வு? படிப்பில், பொருளாதாரத்தில் வாழ்க்கை முறையில் என்று எல்லாவற்றிலும் வித்தியாசம் இருக்கிறதே ஏன்?

தான் செல்வத்துக்கு அதிபதியாக இருந்தும், மக்களுக்குப் பொதுவாக, எல்லோரும் ஒரே மாதிரியாக அனுபவிக்கும் வகையில் செல்வம் போய்ச் சேரவில்லையே என்ற ஆதங்கம் இருக்காதா? ஒரு உண்மையான தாயார் தன்னுடைய எல்லாக் குழந்தைகளையும் ஒரே மாதிரிதானே பாவிப்பாள்? பாரபட்சம் என்னிடமிருந்தே ஆரம்பிக்கிறதே, அது எந்த வகையில் நியாயம்? தன்னுடைய இந்த சந்தேகத்தைப் பரந்தாமனிடமே கேட்டாள்; விளக்கம் சொல்லச் சொன்னாள். ‘மனிதர்கள் எல்லோரும் ஒரேமாதிரியாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவரவருக்கென்று முன்வினைப் பயன் என்று உள்ளது. அதற்கேற்றார்போலத்தான் இந்த ஜென்மத்தில் அவர்களுடைய வாழ்க்கை அமையும்’ என்று பதிலளித்தார் மஹாவிஷ்ணு. அதேசமயம், அவர்கள் நல்ல ஒழுக்கங்களை மேற்கொண்டு, நல்லதையே நினைத்து, நல்ல செயல்களை மட்டுமே செய்துவந்தால், அவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

எல்லோரும் நல்லதையே நினைத்து, நல்லதையே செய்யவேண்டுமென்றால், அப்படி அவர்கள் செய்வதற்கு வழிகாட்ட வேண்டியதும் நம்முடைய பொறுப்புதானே?’ என்று மஹாலக்ஷ்மி கேட்டாள். அதற்கு மஹாவிஷ்ணு, ‘அதுவும் உன் கையில்தான் இருக்கிறது’ என்று சொன்னார். ‘ஒருவருக்கு எல்லா நலன்களும் கிடைக்கவேண்டுமென்றால், அவருக்கு லக்ஷ்மி கடாட்சம் இருக்க வேண்டும்.

அதாவது, உன்னுடைய அருட்பார்வை. இந்த கடாட்சம் பெறுவதற்கு அவர்கள் சில விஷயங்களைக் கடைப்பிடிக்கிறவர்களாக இருத்தல் வேண்டும்,’ என்றார். ‘அப்படி என்னென்ன விஷயங்களை அவர்கள் கடைப்பிடிக்கவேண்டும்?’ - லக்ஷ்மி கேட்டாள். ‘அதையும் நீயே நேரில் போய்ப் பார்த்துவிட்டு வாயேன். நீ வாசம் செய்ய வேண்டிய இடம் எது என்று உனக்கே புரியும். அப்படிப்பட்ட இடங்களில் இருப்பவர்களுக்கு நீயே ஆசியும் அருளும் வழங்கிவிட்டு வா’ என்று சொல்லியனுப்பினார்.

பூலோகத்துக்கு வந்த லக்ஷ்மிக்கு அங்கு வசிக்கும் எல்லோர் வீடுகளுமே, தான் தங்கத் தகுதியான இடம்தான் என்று நினைத்திருந்தாள். ஆனால், அவளுக்கு ஏமாற்றம்தான் பதிலாக அமைந்தது. ஆமாம். விடிந்து வெகு நேரமாகியும்கூட பெரும்பாலான வீடுகளில் வாசல் தெளிக்கப்படவில்லை. வீட்டுக்கு வெளியேதான் இப்படி என்றால், வீட்டுக்குள்ளேயும் ஒவ்வொரு அறையும் குப்பையும் கூளமுமாக இருந்தன. அதைப் பார்த்ததுமே முகம் சுளித்தாள் லக்ஷ்மி.

அந்த வீடுகளுக்குள் போகவே பிடிக்கவில்லை அவளுக்கு. பெருத்த மனவேதனையுடன் தெரு வழியே போய்க் கொண்டிருந்த அவள், ஒரு வீட்டு வாசலில் பளிச்சென்று அழகாகக் கோலம் போடப்பட்டிருந்ததைக் கண்டாள். பசுஞ்சாணம் கரைக்கப்பட்ட நீரால் அந்த வீட்டு வாசல் மெழுகப்பட்டிருந்தது. அதில் அழகான கோலம். அதற்கு செம்மண்ணால் ஓரங்கள் வரையப்பட்டிருந்தன. மிகவும் மங்களகரமாகத் தெரிந்த அந்த வீட்டைப் பார்த்ததுமே லக்ஷ்மிக்கு உடனே பிடித்துப் போயிற்று.

சந்தோஷத்தோடு அந்த வீட்டுக்குள் எட்டிப் பார்த்தாள். வீட்டுக்குள்ளேயும் சுத்தம் ஒளிர்ந்தது. சிறிய வீடுதான் என்றாலும் சுத்தமாகப் பெருக்கி குப்பைகள் முழுமையாகக் களையப்பட்டிருந்தன. வீட்டில் வசிப்பவர்களுடைய தேவைக்கு மட்டுமான பொருட்களை வாங்கி வைத்திருந்ததால் அடைசல் இல்லை. அந்த சில பொருட்களையும் அப்போதுதான் புதிதாக வாங்கியவைபோல பளிச்சென்று துடைத்து வைத்திருந்தார்கள். அந்த வீட்டை அவ்வளவு தூய்மையாக வைத்திருந்த வீட்டுப் பெண்மணியின் பெயர், சோமதேவம்மா.

தன் கணவர் பிைக்ஷ எடுத்துக் கொண்டு வரும் பொருட்களை வைத்து, மிக நல்ல மாதிரியாகக் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தாள் அவள். லக்ஷ்மி தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் வாயிலில் நின்றபடியே குரல் கொடுத்தாள். தன் பசிக்கு ஏதாவது தரும்படி கேட்டாள். வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த சோமதேவம்மா, லக்ஷ்மியை வீட்டுக்குள் வரச்சொன்னாள். தன் கணவர் பிைக்ஷ எடுத்துக்கொண்டு வரும் பொருட்களை வைத்து அவளுக்கு உணவு தயாரித்துத் தருவதாகச் சொன்னாள்.

அவளுடைய உபசரணை லக்ஷ்மியைப் பெரிதும் கவர்ந்தது. தான் வறுமையில் உழன்றாலும் தன்னைக் காத்திருக்கச் சொல்லி, உணவளிப்பதாகவும் சொல்கிறாளே இந்தப் பெண் என்று சந்தோஷப்பட்டாள். வெகு எளிதாக, ‘எதுவும் இல்லே, போ,’ என்று சொல்லி விரட்டியிருக்கலாம். ஆனால், அவள் அப்படிச் செய்யவில்லை. அதனால் சோமதேவம்மாவுக்கு தன்னுடைய முழு கருணையையும் அருளவேண்டும் என்று நினைத்தாள். 

லக்ஷ்மி எங்கே தங்குகிறாளோ, அங்கெல்லாம் சுபிட்சம் பொங்கும், சகல ஐஸ்வர்யங்களும் நிறையும். ஆனால் லக்ஷ்மி உடனே அப்படி எல்லாவற்றையும் அப்போதே, ஒரேயடியாக அனுக்ரகித்துவிடவில்லை. வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அந்த விரத மகிமையால் அவளுக்கு எல்லா வசதிகளும் கிடைப்பதுதான் முறை என்று லக்ஷ்மிக்குத் தோன்றியது. அதனால் சோமதேவம்மாவின் கணவர் வரும்வரை, அவளுக்கு அந்த விரதம் கடைப்பிடிக்கும்  முறையைச் சொல்லிக் கொடுத்தாள்.

பிறகு கணவர் வந்தப் பிறகு அவர் பிைக்ஷ எடுத்துக் கொண்டு வந்திருந்த பொருட்களில் தயாரித்தளிக்கப்பட்ட எளிமையான உணவை உட்கொண்டு சந்தோஷத்துடன் விடைபெற்றுக் கொண்டாள் லக்ஷ்மி. சோமதேவம்மா, லக்ஷ்மி தனக்குச் சொல்லிக்கொடுத்த விரதம் பற்றி கணவரிடம் விவரித்து அடுத்த வெள்ளிக்கிழமையே தான் அந்த விரதத்தை மேற்கொள்ளப்போவதாகச் சொல்லி அப்படியே கடைப்பிடித்தாள்.

அந்த விரதத்தின்போது மஹாலக்ஷ்மியே ஒரு சுமங்கலிப் பெண்ணாக வந்திருந்து, சோமதேவம்மா கொடுத்த மஞ்சள், குங்குமம், தாம்பூல பிரசாதத்தை அன்போடு வாங்கிக்கொண்டாள். விரதத்தின் பலனாக, சோமதேவம்மாவின் குடும்பத்தில் வளம் கூடியது. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றபடி, தனக்குக் கிடைத்த இந்த நற்பலன்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பி, அக்கம்பக்கத்துப் பெண்களுக்கும் அந்த விரதம் பற்றிச் சொல்லி, அவர்களும் பயனடையும்படி செய்தாள் சோமதேவம்மா. சரி, இந்த வெள்ளிக்கிழமை விரதத்தை எப்படி அனுஷ்டிப்பது?

ஏதாவது ஒரு தமிழ் மாதத்தில் வரும் மூன்றாவது அல்லது நான்காவது வெள்ளிக்கிழமையன்று விரதம் மேற்கொள்ளலாம். அன்று விடியற்காலையிலேயே எழுந்து, மஞ்சள் பூசி குளித்துவிட்டு (விரும்பாதவர்கள் மஞ்சளை விட்டுவிடலாம்) நெற்றியிலே குங்குமப் பொட்டு வைத்துக்கொள்ளுங்கள். பசுஞ்சாணம் கரைத்த நீரால் வாசல் தெளியுங்க. ஃப்ளாட்டில் வசிப்பவர்கள் சுத்தமான நீரை கொஞ்சமாகத் தெளித்து, வழுக்கிவிடாதபடி துடைத்துவிட்டு, அதன்மேல் அழகாக ஒரு கோலம் போட்டு, அதுக்கு செம்மண் பார்டர் போடலாம்.

வீடு முழுவதும் பெருக்கி, துடைத்து சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள்.  பூஜையறையையும் சுத்தமாக்கி தூய்மைப்படுத்திக்கொள்ளுங்கள். அங்கே தீபம் ஏற்றி, ஊதுவத்தி கொளுத்தி வைக்கலாம். சாம்பிராணிப் புகை போடலாம். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி அழகுபடுத்தலாம். ஒட்டுமொத்தமாக வீடு முழுவதும்  அன்றைக்குப் பளிச்சென்று இருப்பது நல்லது. அன்று முழுவதும் மஹாலக்ஷ்மி ஸ்லோகங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கலாம் அல்லது ஆடியோ ஸிடி போட்டுக் கேட்கலாம்.

லக்ஷ்மி ஸ்லோகங்கள் மட்டுமில்லாமல், தெரிந்த அம்பாள் பாடல்களையும் சொல்லலாம். அன்று முழுவதும் எளிமையாக பால், பழம் என்று மட்டும் சாப்பிட்டு விரதமிருக்கலாம். முடியாதவர்கள் அல்லது அவரவர் உடல்நலத்தைப் பொறுத்து பகலில் ஒருவேளை மட்டும் உணவு எடுத்துக்கொள்ளலாம். இப்படி விரதம் மேற்கொண்டபிறகு தொடர்ந்து பதினோரு வெள்ளிக்கிழமைகளில் கடைபிடிக்கலாம். நடுவே ஏதேனும் காரணத்துக்காக ஏதாவதொரு வெள்ளிக்கிழமை முடியாமப் போனால், அதற்கடுத்த வெள்ளிக்கிழமையிலேர்ந்து தொடரலாம்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை நேரத்தில் பக்கத்துப் பெருமாள் கோயிலில் தாயாரை தரிசிப்பது முக்கியம். இதை முதல் வெள்ளிக்கிழமை விரதத்தன்றாவது செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் வந்தபிறகு, முடிந்த பிரசாதங்களை (சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி மாதிரி) தயாரித்து, வீட்டு பூஜையறையில் மஹாலக்ஷ்மிக்கு நிவேதனம் செய்யுங்கள். அவரவர் வசதிகேற்ப சுமங்கலிகளை அழைத்து, அவங்களுக்கு குங்குமம், மஞ்சள், பூ, பழம், வெற்றிலை பாக்கு, ரவிக்கைத் துணி என்று அளிக்கலாம்.

இதே மாதிரி பதினொரு வெள்ளிக்கிழமைக்கும் செய்தால் நல்லது. சில குடும்பங்களில் பரம்பரை வழக்கப்படி எல்லா வெள்ளிக்கிழமைகளிலேயும் இந்த விரதத்தை அனுசரிப்பதுண்டு. கீழ்க்காணும் ஸ்லோகத்தை வெள்ளிக்கிழமை விரதத்தன்று சொல்லி வரலாம்.
நம: கமலவாஸின்யை, நாராயண்யை நமோ நமஹ
க்ருஷ்ண ப்ரியாயை ஸததம் மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ
வைகுண்டே யா மஹாலக்ஷ்மீ: யா லக்ஷ்மீ: க்ஷீரஸாகரே
ஸ்வர்க்க லக்ஷ்மீ ரிந்த்ரகேஹே, ராஜலக்ஷ்மீ: ந்ருபாலயே
க்ருஹலக்ஷ்மீஸ்ச க்ருஹிணாம், கேஹே சக்ருஹதேவதா
இதம் ஸ்தோத்ரம் மஹா புண்யம், த்ரிஸந்த்யம்: ய: படேந் நரஹ
குபேர துல்யஸ் ஸ பவேத் ராஜராஜேஸ்வரோ மஹான்

பொதுப் பொருள்: தாமரையில் வாசம் புரியும் திருமகளே நமஸ்காரம். நாராயணியாய் திகழ்பவளே, கிருஷ்ணருக்குப் பிரியமுள்ளவளே, மஹாலக்ஷ்மியாய் துலங்குபவளே, வைகுண்டத்தில் மஹாலக்ஷ்மியாகவும், பாற்கடலில் ஸ்வர்க்க லக்ஷ்மியாகவும், தேவேந்திரனின் மாளிகையில் ராஜலக்ஷ்மியாகவும், அன்பான குடும்பத்தில் கிரக லக்ஷ்மியாகவும் திகழும் தாயே, நமஸ்காரம். முடிந்தால் நாகை மாவட்டம், சீர்காழியில் உள்ள  அண்ணன் பெருமாள் (வெங்கடாசலபதிக்கே அண்ணன்!) கோயிலுக்குச் சென்று மஹாலக்ஷ்மி தாயாரை வழிபடுங்கள். அல்லது பக்கத்திலுள்ள வெங்கடாசலபதி கோயிலில் தாயாரை வணங்குங்கள்.





திங்கள், 12 ஜூன், 2017

மறுபிறவி இல்லாதவர்களே இந்த ஈசனைத் தரிசிக்க முடியும்


மீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோள் என்பர் பெரியோர். அத்தகைய பேரின்ப நிலையை அருளும் தலமாக விளங்குகிறது தேப்பெருமாநல்லூர். புராண காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்று சொல்லப்படுகிறது.

மிகவும்  பழமையானது இத்திருக்கோவில். ஆகம விதிக்கு முற்றிலும் மாறாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர். "யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள் தான் இக்கோவிலுக்கு வரமுடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும்'' என்று சொல்கிறார் ஆலய குருக்கள். சுவாமியைத் தரிசித்ததும், பக்தர்களுக்குப் பிரசாதமாக வில்வதளத்துடன் ருத்ராட்சம் ஒன்றும் கொடுக்கிறார்கள்.




மகா மண்டபத்திற்குள் தெற்குத் திசைநோக்கி தனிச் சந்நிதியில் வேதாந்த நாயகி அருள்புரிகிறாள். இந்த அம்பாள் வலது காலை எடுத்து வைத்து முன்னோக்கி வருவது போன்ற தோற்றத்தில் உள்ளாள். அம்பாள் நம்முடன் பேசுவதுபோல் உதடுகள் குவிந்த நிலையில் உள்ளன. இது வேறெங்கும் காணக்கிட்டாத காட்சி. நமக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்கும் பாவனையோடு இருப்பதாகச் சொல்கின்றனர். இந்த அன்னையின் உபதேசக் கருணைப் பார்வையால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். இந்த அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

அம்பாள் சந்நிதிக்கு அருகில் சாந்த பைரவர் என்று சிறிய உருவிலும் மகா பைரவர் என்று சுமார் ஐந்தடி உயரத்தில் பெரிய உருவிலும் ஒரே சந்நிதியில் இரண்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர். பைரவர் சந்நிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை வாகனத்துடன், இடுப்புக்குக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக மேற்கு நோக்கி இறைவனைப் பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். இவர் ஏன் ஒய்யாரமாக நிற்கிறார்?

சனி பகவான் இறைவனைப் பிடிப்பதற்குரிய நேரம் நெருங்கி விட்டதால் அம்பாளிடம், "நாளை காலை ஏழேகால் நாழிகைப்பொழுது ஈசனைப் பிடிக்கப் போகிறேன்'' என்று சொன்னார். அதைக் கேட்டுக் கோபம் கொண்டாள் அம்பாள். எப்படியும் ஈஸ்வரனை ஏழேகால் நாழிகை பிடித்து தன் வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மறுநாள், ஈஸ்வரனைப் பிடிக்க சனி பகவான் மெதுவாக வந்தார். அப்போது அன்னை, ஈஸ்வரனைப் பக்கத்திலிருந்த அரச மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளச் சொன்னாள். ஈஸ்வரனும் அப்படியே செய்தார்.



அங்கு வந்த சனி பகவான் அம்பாள் அரச மரத்தடியில் நிற்பதைப் பார்த்து ஈஸ்வரன் எங்கே இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார். அதனால் அரச மரத்தைப் பார்த்த வண்ணம் அங்கேயே நின்று விட்டார். சனி பகவான் சொன்ன ஏழேகால் நாழிகை கழிந்ததும் அங்கிருந்து மெதுவாக நகர ஆரம்பித்தார் சனி பகவான். அப்போது அன்னை சனி பகவானைப் பார்த்து,

"என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச் செல்கிறாயா?'' என்று கேட்டாள். சனி பகவான், "நான் வந்த வேலை வெற்றியுடன் முடிந்தது. ஈஸ்வரனே அரச மரத்தின் பின்புறம் ஒளிந்திருக்க நேர்ந்ததல்லவா? அந்த நேரமே நான் அவரைப் பிடித்த நேரம்'' என்று ஆணவத்துடன் சொன்னதுடன், சற்று ஒய்யாரமாக இடுப்பில் இடக்கை வைத்த வண்ணம் அம்பாள் முன் நின்றார். சனி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரன் அரச மரத்தின் பின்புறத்திலிருந்து கோபத்தோடு வெளிப்பட்டு, மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார்.

இரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான் சிவபெருமானை நோக்கி, "ஈஸ்வரா! தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படிதான் நான் இயங்குகிறேன். நான் இல்லையேல் பூலோகவாசிகள் தங்கள் விருப்பப்படி மிகுந்த ஆணவத்துடன் செயல்படுவர். இதனால் உலகில் ஆணவக்காரர்களும் அக்கிரமம் செய்பவர்களும் பெருகி விடுவார்கள். எனவே ஆணவத்தோடு நான் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும்'' என்று வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இரு கூறான உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இவ்வாறு ஆணவம் நீங்கிய இந்த சனி பகவானை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.



மகாமந்திர பைரவராக உக்கிரமாகக் காட்சி தந்த ஈஸ்வரனுக்கு, நான்கு வேதங்களைச் சொல்லி அவர் கோபத்தைத் தணித்தாள் அம்பிகை. அம்பாளின் அருள் பார்வையால் கோபம் தணிந்து மீண்டும் சாந்த சொரூபியானார் ஈஸ்வரன். இதனால் அம்பாள் வேதாந்த நாயகி என்று பெயர் பெற்றாள். அந்த வேளையில் நாரதர் அங்கு வந்தார். "ஈஸ்வரா! நீங்கள் சனி பகவானை இரண்டாகக் கிழித்த பாவம் உங்களைப் பிடித்துக் கொண்டது. இனிமேல் நீங்கள் விஸ்வரூபம் எடுக்க இயலாது. எனவே நீங்கள் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களை ஒருசேர தரிசித்தால் அந்தப் பாவம் நீங்கும்'' என்று கூறினார்.

உடனே ஈஸ்வரன் பன்னிரண்டு ஜோதிர் லிங்க பரமேஸ்வரர்களையும் இத்திருத்தலத்திற்கு வரவழைத்தார். இதனைக் கண்ட நாரதர், "இவர்களில் ஒருவர் இங்கு வந்தாலும் எத்தகைய பாவங்களும் சாபங்களும் தோஷங்களும் நீங்கிவிடும். அப்படியிருக்க பன்னிரண்டு பேரும் வந்து இறங்கியதால் இது மிக அதிசயமான க்ஷேத்திரம்'' என்று போற்றிப் புகழ்ந்தார்.

"பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணிய தலம் இதுவென்பதால், ஏழேழு ஜென்மங்களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி இல்லாதவர்களும் தான் இங்கு வந்து தரிசிக்க முடியும்'' என்று நாரதர் சொன்னார். அதில் ஒரு ஜோதிர் லிங்கமான காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன் அங்கேயே தங்கிவிட்டார். அந்தச் சந்நிதி மகாமண்டபத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ளது.

இத்தல இறைவனின் மகிமையை அறிந்த அகத்திய மாமுனிவர் ஸ்ரீ விசுவநாத சுவாமியைத் தரிசிக்க வந்தார். அகத்தியர் வருவதை அறிந்த சிவபெருமான், அகத்தியருக்கு மறுபிறவி உண்டு என்பதால் அவரை அங்கு வராமல் தடுக்க எண்ணினார். அதனால் மகரந்த மகரிஷியை அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்குமாறு கூறினார். இறைவனின் கட்டளையை ஏற்ற மகரந்த மகரிஷி, அகத்தியர் மேற்கொண்டு நடக்க முடியாமல், மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து விட்டார். வழி மறித்த மகரந்த மலர்களை ஞான திருஷ்டியில் பார்த்த அகத்தியர், அந்த மலர்களில் மகரந்த மகரிஷி இருப்பதை அறிந்து, "மகரிஷியே! நான் சுவாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்; வழிவிடுங்கள்'' என்றார்.

மகரந்த மகரிஷி வழிவிட மறுக்கவே, கோபமடைந்த அகத்தியர், "பூ போன்று இருக்கும் உன் முகம் யாழி முகமாக மாறட்டும்'' என்று சாபமிட்டார். அகத்தியரின் சாபம் பலிக்க, யாழி முகத்துடன் காட்சி தந்த மகரிஷி, "மாமுனிவரே, இதனை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. இறைவன் கட்டளைப்படி தான் தங்களை வழி மறித்தேன். உங்களுக்கு மறுபிறவி உள்ளதால் நீங்கள் இத்தல இறைவனைத் தரிசிக்க முடியாது'' என்று கூறி தன் சாபத்துக்கு விமோசனம் கேட்டார்.

சாந்தமடைந்த அகத்தியர், "மகரந்த ரிஷியே, நான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற, உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால், சாபம் நீங்கி மீண்டும் பழைய முகத்தினை அடைவீர்'' என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார். உடனே மகரந்த ரிஷி தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயத்திற்கு வந்து யாழி (சிங்க) முகத்துடன் பூஜை செய்தார். இன்று ஒருவகை மலரால் பூஜை செய்தால் அடுத்த நாள் வேறு ஒரு மலரைக் கொண்டு பூஜை செய்தார். இப்படியாக ஐம்பது வருடங்கள் பூஜை செய்தார். 

ஒரு நாள் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அவர் கழுத்திலிருந்த ருத்ராட்ச மாலை அறுந்து சுவாமியின் சிரசில் (லிங்கத்தில்) விழுந்தது. அப்போது இறைவன் ஜோதியாக ஜொலித்தார். இதனைக் கண்ட மகரந்த ரிஷி, ஒருமுக ருத்ராட்சத்திலிருந்து பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்ப்பித்து பூஜை செய்ய, சுவாமி ரிஷிக்குக் காட்சி கொடுத்தார். ரிஷி தன் யாழி முகம் மாறி சாப விமோசனம் அடைந்தார். அதனால் தான் இத்தல இறைவனுக்கு ருத்ராட்ச கவசம் சாற்றப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இருபத்தியிரண்டாயிரம் ருத்ராட்ச மணிகளைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடப்படுகிறது. ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் அணிவிக்கிறார்கள். இதுபோன்ற ருத்ராட்ச கவசம் அணிந்த மேனி உள்ள இறைவனை எங்கும் தரிசிக்க முடியாது என்கிறார்கள். இந்தக் கவசத்தினைத் தயார் செய்ய உதவியவர் திருச்சியைச் சேர்ந்த பக்தர் சிவகுமார் என்பவர்.

மகா மண்டபத்திலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால் நந்தியெம் பெருமான் காட்சி தருகிறார். இவருக்கு வலக்காது இல்லை. பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விஸ்வநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். ஈசன் அப்போது ஜோதிர் லிங்கமாய் காட்சி கொடுத்தார்.

இந்த நிலையில் பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலக்காது மடங்கி உள்நோக்கிச் சென்று விட்டது. இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், "நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலக்காது இருந்த பக்கம் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்'' என்று ஆறுதல் கூறினார்.

அதன்படி, இந்த நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக் கூறினால் அது நிவர்த்தி ஆகிவிடுகிறது என்கிறார்கள். ஆலயத்தின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இவர் சீடர்கள் யாருமின்றி காளை வாகனத்தில் அமர்ந்து நிருதி திசையை நோக்கி அருள்புரிகிறார். இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்பர். இவரை தரிசித்தால் சாபங்கள் நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். இவருக்கு தினமும் பழைய சோறு (தண்ணீர் ஊற்றி வைத்த முதல் நாள் சோறு) படைக்கப்படுகிறது. இவரை மனதார வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும் என்கிறார் கோவில் குருக்கள்.

இக்கோவிலின் வடமேற்குப் பகுதியில் தன் பத்தினிகளுடன் முருகப்பெருமான் அருள்புரிகிறார். ஆலயத்தின் வடக்குக் கோஷ்டத்தில் மகாவிஷ்ணு காட்சி தருகிறார். இவர், நவராத்திரி விழாவின் போது தன் மாப்பிள்ளையான சிவபெருமானையும் தன் தங்கையான வேதாந்த நாயகியையும் சீர்வரிசை கொடுத்து, தன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்வாராம். இந்தச் சிவாலயத்திற்கு அருகில் பெருமாள் கோவில் உள்ளது. இந்தப் பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா நடைபெறும் பொழுது, கடைசி நாள் சிவதம்பதியர் அங்கே வருகை தருவது வழக்கமாம். அவ்வாலயத்திலுள்ள பெருமாள் இங்கு வந்து சீர்வரிசை கொடுத்து அழைத்ததன் அடையாளமாக இங்கு வடக்குக் கோஷ்டத்தில் எழுந்தருளியுள்ளார்.

அவருக்கு அருகில் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் சந்நிதி உள்ளது. இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர்கள் அருள் புரிகிறார்கள். ஒருவர் பெரிய தோற்றத்தில் தெற்கு நோக்கியும் இன்னொருவர் சிறிய திருவுருவில் கிழக்கு நோக்கியும் உள்ளனர். சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு அருகில் கோஷ்டத்தில் நான்கு கரங்கள் கொண்ட விஷ்ணு துர்க்கை எழுந்தருளியுள்ளாள். அம்பாள் சந்நிதியின் பின்புறம் வடக்கு கோஷ்டத்தில் எட்டு கரங்கள் கொண்ட துர்க்கை காட்சி தருகிறாள். இந்த இரு துர்க்கைகளும் திரிபங்க நிலையில் நின்று வடமேற்கு திசையை நோக்கிக் காட்சி தருகிறார்கள்.

கன்னி மூலையில் கபால விநாயகருக்குத் தனிச்சந்நிதி உள்ளது. இவரை வழிபட சகல பாவங்களும் நீங்கி, எடுத்த காரியம் முழு வெற்றி பெறும் என்பர். இக்கோவிலின் கர்ப்பகிரகம் மட்டும் தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது. இத்திருக்கோவிலின் தலமரம் வன்னி. தலத் தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இத்தலத்தின் புராணப் பெயர் தேவராஜபுரம்.

தினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரச் செய்து வழிபடுகிறார். அதற்குப் பின்தான் காலை ஏழு மணி அளவில் கோவில் திறக்கப்படுகிறது. சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது படர்வதற்கு ஏற்ப கிழக்கு வாசல் சாளரம்போல் அமைக்கப்பட்டுள்ளது.


சூரிய கிரகணத்தின்போது ஒரு பெரிய நாகம் எங்கிருந்தோ வந்து தலமரமான வில்வத்தில் ஏறி, வில்வதளத்தைப் பறித்து வாயில் கவ்விக் கொண்டு, கிழக்கு வாசல் வழியாக நுழைந்து சிவலிங்கத்தின் மீது ஏறி வில்வ தளத்தை வைத்தபின், கீழே இறங்கிப் படம் எடுத்து வழிபட்டபின், வந்த வழியே சென்று மறைந்துவிடுமாம்.

சிவன் சின்னங்களும் அதன் விளக்கங்களும்

சிவன் சின்னங்களும் அதன் விளக்கங்களும் 

ஈசனடி போற்றி – நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

பல்லாயிரம் ஆண்டுகளாக இப்புண்ணிய பூமியில் வாழ்ந்து அனுபவம் பெற்று, வாழ்வின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் தீர ஆராய்ந்து, இறைவனை உணர்ந்து, அவனின் திருவருளைப்
பெற்று சீரூம் சிறப்புமாக வாழ்ந்த பூமி நம் பாரதபூமி. கடந்த சில நூற்றாண்டுகளில் இப்பூவுலகில் வேறு பகுதியில் வாழ்ந்து வந்தவர்களின் பேராசை, பொறாமை, அபகரிக்கும் தன்மை போன்ற குணங்களினாலும் நம்மிடையே ஒற்றுமையின்றி தவித்ததாலும், நம் செல்வங்களையும், ஞானத்தையும், பல அரிய பொக்கிஷங்களையும் இழந்து நிற்கிறோம். அது மட்டுமின்றி, இவ்வுலகில் வேறுபகுதியில் இருப்பவர்கள் நம் அறியாமையை பயன்படுத்தியும் நம்மிடம் மிஞ்சியிருக்கும் செல்வங்களை குறிவைத்தும் இன்றும் நம்மை தொடர்ந்து தாக்கி வருகிறார்கள்.

இச்சமயத்தில் நாம் இறைவனை வணங்கி, அவன் அருள் பெற்று, நம் ஞானத்தை மீண்டும் பெறவும், நம் செல்வங்களை பெறவும், நம் மக்களை காக்கவும், நாம் மக்களுக்காக தொண்டாற்றவும் வேண்டும். இதைப் போன்ற ஒரு தெய்வீக வேலை இவ்வுலகில் வேறு எதுவுமில்லை. 

ஓம் நமசிவாய.

சிவன் கழுத்தில் பாம்பு ஏன் வந்தது ? 



பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாலூட்டி வளர்த்தாலும் பாம்பு தீண்டத்தான் செய்யும் என்பார்கள். பாம்புகளை செல்ல பிராணியாக யாரும் வளர்ப்பதில்லை. பாம்புகள் வலையில் உள்ள எலிகளை பிடித்து உண்பதால் விவசாயிகளின் நண்பன் என்பார்கள். இத்தகைய குணங்களை கொண்ட பாம்பு ஏன் சிவனின் கழுத்தில் வந்தது. 


சிவபெருமானுடைய வடிவம் மூன்று. அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூன்றுமாம். அருவத் திருமேனியையுடை ய பொழுது சிவன் எனவும், அருவுருவத் திருமேனியையுடைய பொழுது சதாசிவன் எனவும், உருவத்திருமேனியையுடைய பொழுது மகேசுவரன் எனவும் பெயர் பெறுவ ர்.
மகேசுவரன் 25 வடிவங்களி ல் அருள்புரிகிறான். மேலும், சரபேஸ்வரர், பைரவர், திரிபாதமூர் த்தி என்று பல்வேறு மூர்த்திகளாகவும் ஆகிறான்.


சுந்தரர் திருமழபாடியி ல் பாடியருளிய தேவார ப் பாடல் வரி ஒன்றைக் காண்போம்.
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.


 பத்மாசனம். 

அந்த சிவனே பத்மாசன நிலையில் அமர்ந்திருப்பாத காண்கிறோம். அவனின் ஒளி மிகுந்த கண்கள் முக்கால் பாகம் மூடிய நிலையில். இரு புருவங்களுக்கும் நடுவில் நெற்றிக்கண். நெற்றியில் திருநீற்றினால் மூன்று கோடுகள். செம்மை நிற சடைமுடியான். அவன் தலையில் கங்கை ஆறாக பெருக் கெடுத்து ஓடுகிறாள். பிறையை தலையில் சூடிய பெருமானாய்

இருக்கிறான். சிவனுக்கு பிடித்த கொன்றை மலரை தலையில் அணிந்திருக்கிறான். உடல் முழுவதும் திருநீற்று கோடுகள். கைகளிலும் கழுத்திலும் உருத்திராட்ச மாலை. கழுத்தில் பாம்பு. உடுக்கையும் சூலாயுதத்தையும் வைத்திருக்கிறான். விடையாகிய காளை மாட்டை வாகனமாக வைத்துள்ளான். புலித்தோலை இடையில் அணி ந்துள்ளான். கைலாய மலையை வீடாக வைத்து உள்ளான். நடனத்தை உருவாக்கியவனாய் நடராசனாய் இருக்கிறான். இப்பிரபஞ்ச அதிர்வுகள் யாவையும் கடந்த சலனமில்லாத முக பாவனையோடு நமக்கு காட்சி தருகிறான். இன்னும் இன்னும் நமக்கு புலப்படாத எவ்வளவோ தத்துவங்களை அடக்கியவனாய் நமக்கு வேண்டும் வரங்களை அள்ளித்தந்து அருள் புரிகிறான்.

நெற்றிக்கண்


நமது இரண்டு கண்களுக்கும், மூக்கின் மேல் சுழி முனைக்கும், புருவங்களின் இடைநடுவே, சிறு ஊசித்துவாரத்தில் பத்தில் ஒரு பாக அளவில் மிக நுட்பமாக இருக்கும் துவாரத்திற்கு “நெற்றிக் கண்” என்று பெயர். இதை மிக இலேசாக சவ்வு மூடிக்கொண்டிருக்கிறது.


குண்டலினி  சக்தியை மேலே எழுப்பி தலையின் நடு உச்சி பகுதிக்கு கொண்டு வரும்போது அளப்பரிய ஞானம் தோன்றும். அப்போது நெற்றிக் கண்ணும் திறக்கும். நெற்றிக் கண்ணினால் பல விசயங்களை உணர முடியும். நெற்றிக்கண் மிகவும் சக்தி வாய் ந்ததாகும். நெற்றிக்கண் ஞானத்தின் உச்சத்தை குறிக்கும்.

உடுக்கை

உடுக்கை பிரபஞ்ச படைப்பின் ஒலியை ஒலிக்கிறது. 

உடுக்கையை  அடிக்கும் போது ஓம் என்ற பிரணவ மந்திர ஒலி பிறக்கிறது. இந்த நாத ஒலி பிரபஞ்ச ஆக்கத்தின் பிறப்பிடம். பிரபஞ்ச படைப்பை ஆக்கும் ஆனந்த தாண்டவத்தை தொடங்கும் முன்னர் சிவன், உடுக்கையை 14 முறை அடிக்கிறார். இது பிரபஞ்ச இயக்கத்துக்கு தேவையான சாத்திரத்தை உருவாக்குகிற து. இவ்வாறு பிரபஞ்ச இயக்கத்துக்கு தேவையானவற்றை உரு வாக்கிய பின்னர் சிவன், ஆனந்த தாண்டவத்தை தொடங்குகிறா ர். ஆகவே, உடுக்கை பிரபஞ்ச படைப்பின் ஒலிக்குறிப்பாகும்.

பிறை சந்திரன்


பிறை சந்திரன் வளரும், தேயும் குணமுடையது. காலச் சக்கரத்தில் இந்த வளர்தலும் தேய்தலும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருக்கும். காலத்தை நாம் இரவு பகல் என்று உணர்ந்தாலும், தினமும் நிகழும் கால மாற்றம் சந்திரன் மூலம் நம் கண் முன்னே காலம் நகர்ந்து செல்வதை எளி தாக உணர்த்துகிறது. இந்த பிரஞ்சத்தையே படைத்த இறைவன், காலத்தை வென்றவனாவான். இந்த தத்துவத்தையே பிறை சந்திரன் உணர்த்துகிறது.

நெற்றியில் மூன்று திருநீற்று கோடுகள்


இவ்வுலகில் பிறந்து உயிரினங்கள் யாவும் இறுதியில் தீயில் வெந்து சாம்பலாகும் தத்துவத்தை தாங்கியுள்ளது திருநீறு.
காராம் பசுவின் சாணம் மருத்துவ குணம் மிக்கதாகத் திகழ்கிறது. இந்த சாணத்தை நிலத்தில் படாமல், அருகம்புல்லின் மேல் விழ வைத்து, அந்த அருகம்புல்லுடன் அதனை தீயிலிட்டு திருநீறு போல் ஆக்கி, அதனை பூசி வந்தால் தீராத நோயும் தீரும் என மருத் துவ நூல்கள் கூறுகின்றன.
திருநீறு உடலில் உள்ள நீர்த்தன் மையை உறிஞ்சவல்லது. நம்மை சுற்றியுள்ள அதிர்வலைகளில் நமக்கு நன்மை பயக்ககூடிய நல் ல அதிர்வலைகளை மட்டுமே உள்வாங்கும் தன்மையுடையது



திருநீற்றை முக்குறியாக அணிகிறோம். ஏனென்றால் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன் று மலங்களை வேரோடு நீக்கினால் தான் நாம் முக்திக்கு தகுதி உடையவர் ஆகிறோம் என்பதை அக்குறி உணர்த்துகிறது.
திருநீறு இன்னும் பற்பல நன்மைகளை நமக்கு அருள்கிறது.

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறுசெந்துவர் வாயுமை பங்கள் திருஆலவாயான் திருநீறே


என்பது திருஞானசம்பந்தர் திரு நீற்றுப்பதிக வாக்கு.

சூலாயுதம்


மூன்று முனைகளை கொண்ட சூலாயுதம், சிவனின் இச்சா, கிரியா மற்றும் ஞான சக்தியை குறிக்கிறது. இச்சையினால் படைத்தலும், கிரியையால் காத்தலும் ஞானத்தினால் நன்மை பெறுதலும் ஆகும். இந்த ஆயுதம் வல்வினைகளை அழித்து நன்மை பயப்பவை.

கொன்றை மலர்

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, கோடையின் துவக்கத்தில் மலரக் கூடியது கொன்றை மலர்கள். இதற்கு சொர்ணபுஷ்பம் என்ற மற்றொரு பெயருமுண்டு. சரக்கொன்றை, சிறுகொன்றை, செங் கொன்றை , மஞ்சள்கொன்றை, மைக்கொன்றை , மயில்கொன்றை, புலிநககொன்றை , பெருங்கொன்றை என பல வகையா க இருக்கும் கொன்றை, தமிழகத்தைப் பொறுத்தவரை காடும் காடு சார்ந்த பகுதியான முல்லை பகுதிக்கு உரிய மரம்.


மருத்துவ குணத்திலும் கொன்றை மரம் ஈடு இணையற்றது. சரக்கொன்றை சிறந்த நோ ய்க்கொல்லியாகிறது. கண் நோய்கள், மலச்சிக்கல், தோல் நோய்கள், சர்க்கரை நோய், சளி என்று பல்வேறு நோய்களை கட்டுபடுத்த பயன்படுகிறது. சிவன் கொன்றை மலர் தரித்தவனாக காட்சி தருகிறான்.

புலித்தோல்

புலி மிகுந்த ஊக்கமுடைய விலங்காகும். புலித்தோல் இயற்கையின் சக்தியைக் குறிக்கிறது. இது உலகி ன் ஆக்க சக்திகளுக்கு மூலமாகவும் இருக்கிறது. சிவன் புலித்தோலின் மேல் அமர்ந்திருப்பது, அவன் எல்லா சக்திக ளுக்கும் அப்பாற்பட்டவர் என்பதை உணர்த்துகிறது.


உருத்திராச்ச மாலை 

உருத்திராச்சம்  என்பது இமய மலையில் உண்டாகும் ஓர் மரத்தின் விதையாகும். இந்த உருத்திராச்சத்திற்கு  மனித உடலில் ஏற்படும் பலவித நோய்களை நீக்கும் தன்மை இருக்கிறது. உருத்திராச்சம்  மனித உடலின் அதிக வெப்பத்தை உறிஞ்சக்கூடிய து. மனித உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது வயிற்றிலும் வாயிலும் புண்உருவாகிறது. பஞ்ச பூதங்களின் வெவ்வேறு விகிதசேர்க்கையே  நவ கிரகங்களாகும். இந்த நவகிரகங்களினால் உண்டாகும் பாதிப்புகளை குறைக்க உருத்திராக்கம் பெரிதும் உதவுகிறது.


பாயும் கங்கை


கங்கை நதி வளமையும் செல்வ செழிப்பையும் அளிக்கவல்லது. மானுட நல் வாழ்வுக்கு நல்ல ஞானம் மிக அவசியம். கிடைத்தற்கரிய இந்த ஞானம் காலத்தின் மாற்றத்தில் நலிந்துவிடாமல் தலைமுறை தலைமுறையாக ஊடுருவிச் செல்வது அவசியம். இந்த ஞானம் தலைமுறை கடந்து செல்வதையே கங்கை நதி உருவகிக்கிறது. இந்த ஞானம் எல்லா உயிரினங்களுக்கும் நல் வாழ்க்கையும் , அமைதியையும் கொடுத்து கொண்டே இருக்கும்.

தோடு


சிவனின் இரண்டு காதுகளிலும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். சிவன் உமையொ ரு பாகனாவான். உமையம் மையை தன்னுள் ஒரு பாக மாக கொண்டவன். பெண்கள் அணியும் தோடை அணிந்த இவனது இடது காது, இந்த தத்துவத்தை உணர்த்திக்கொண்டேயிருக்கும்.
காளை (விடை) வாகனம்

ந்தி தேவர்.

 நந்தி என்ற சொல்லுக்கு எப்பொதும் ஆனந்த நிலை யில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்த வராக நந்தி தேவர் கருதப்படுகின்றார்.

செம்பொருள் ஆகமத்திறம் தெரிந்துநம் பவமறுத்த நந்திவானவர்

எனும் செய்யுளிலிருந்து சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்திதேவரே என்பது தெளிவாகின்றது.

நந்தி தேவர் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற உபதேசத்தை இவரிடமிருந்து சனற் குமாரரும், சனற்குமாரரிடமிருந்து சத்தியஞான தரிசினிகளும், சத்தியஞான தரிசினிகளிட மிருந்து பரஞ்சோதியாரும், பரஞ்சோதியாரிடமிருந்து மெய்கண்டாரும் பெற்றனர்.
நந்தி வெண்மையாகிய தூய்மையும் ஆண்மையும் நிறைந்தது. இது தர்மத்தை குறிக்கிறது. 

தர்மமே இறைவனை தாங்கி நிற்கிறது . சிவபெருமானின் ஆணைக்கேற்ப கலியுகத்தில் ஒரு காலை மட்டும் தூக்கி நிற்கும். நந்தி சிவனிடம் பெற்ற வரத்திற்கேற்ப எல்லா கோவில்களிலும் சிவன் முன்னே அவரை நோக்கியபடியே இருக்கும். ஆன்மாக்களாகிய நாம் நம் கவனத்தை நந்தியைப் போல எப்போதுமே இறைவன் மீதே நோக்கியிருக்க வேண்டும்.
.

கழுத்தில் பாம்பு

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும். பாம்மை செல்ல பிரா

ணியாக வளர்க்க முடியாது. என்ன தான் பால் ஊற்றி வளர்த்தாலு ம், சமயங்களில் வளர்த்தவனையே கடித்து விடும். விளைநிலங்களில் பயிர்களை நாசமாக்கும் எலிகளை பிடித்து உண்பதால் விவசாயி களின் தோழனாகும். இவ்வாறு பல்வேறு குணமுடைய பாம்பு போ ன்ற விலங்களின் மீது இறைவனு க்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதை உணர்த்துகிறது.
இன்னுமொரு முக்கியமான தத்துவம்:

மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியாகிய சிவம் ஒரு அசைவற்ற பாம்பைப் போல உறங்கிக் கொண்டிருக்கிறது. இதை எழுப்பி முதுகுத்தண்டி ன் வழியே தலையில் இருக்கு ம் சக்தியோடு சிவம் சேரும் போது அளப்பரிய ஞானம் உண் டாகும். ஒருவனுக்கு எட்டு சித்திகளும் கிடைக்கும். இந்த தத்துவத்தை விளக்க வே குண்டலினி சக்தியாகிய பாம்பை தன் கழுத்தில் அணிந்திருப் பது தெளிவு படுத்துகிறது.

தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதிசூடி

காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடுடைய மலரான் உனை நாட்பணிந்தேத்த 

அருள் செய்தபீடுடைய பிரம்மாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே!


வெள்ளி, 9 ஜூன், 2017

குளிகை பிறந்த கதை

குளிகை பிறந்த கதை

அன்பு தோழிகளுக்கு என்  அன்பு நிறைந்த வணக்கங்கள்.என்னுடைய பதிவுகள்  பனுள்ளதாக உங்களுக்கு இருக்கும் என்ற நல்ல எண்ணத்தில்  எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். 
 இதுவே நான் கடவுள் மீது கொண்ட பக்தி எனலாம்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பக்தியை வெளிப்படுத்துவர்.எனக்கு தெரிந்த கருத்துக்களை, கதைகளை இந்த பதிவுமூலம் சொல்லுவதால் மனத்திருப்தியும் , கடவுளின் அனுக்கிரகமும்  கிடைத்தது.கிடைக்கிறது. கிடைக்கும் அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

நீங்களும் உங்கள் குடும்பத்தினரின் நலனுக்காக, உங்களது இஷ்ட கடவுளை  நம்பிக்கையுடன் வணங்குங்கள்.பலனும் அடைவீர்கள் அது திண்ணம். 

குளிகை நேரத்தில் எதை செய்தால் நல்லது என்று அறியும் விதமாக அமைந்ததே இந்த கதை

ராவணன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். காரணம் அவன் தந்தையாகப் போகிறான். குல குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்றான்.
"குருவே! எனக்கு பிறக்க போகும் குழந்தை, பல வித்தைகளில் ஜித்தனாகவும் (வெற்றி வீரன்) எவராலும் வெல்ல முடியாத வலிமை கொண்டவனாக திகழவும் எந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லதென கணித்து சொல்லுங்கள்,'' என்றான்.

“ராவணா! நல்ல கிரகங்கள் எல்லாம் ஒரே ராசி கட்டத்தில் வந்தால் நல்லது. ஆனால், அது எப்போது வருகிறது என யோசித்து யோசித்து தலையே வெடித்துவிடும் போல் இருக்கிறது. சுபகிரகங்களை ஒட்டுமொத்தமாக சிறையில் அடைத்தால் என்ன என்று கூட தோன்றுகிறது,'' என்றார் வேடிக்கையாக.
அப்படி சொன்னது அவருக்கே வினையாகி விட்டது.
“அவ்வளவு தானே! நவக்கிரகங்களையும் ஒன்றாக சிறையில் அடைத்து விடுகிறேன். அதேநேரம், கிரகங்களில் நீங்களும் ஒருவர் என்பதால் உங்களையும் சிறைப்பிடிக்கிறேன்,'' என்றான்.
சுக்கிரன் எனப்படும் சுக்கிராச்சாரியாரையும், மற்ற கிரகங்களையும் சிறையில் தள்ளினான். தங்கள் நிலைக்கு காரணம் சுக்கிராச்சாரியார் என்பதால் அவரை நவக்கிரகங்களும் திட்டித் தீர்த்தன.
"உங்களுக்கு திறமை இருக்கிற அளவுக்கு புத்தி வேண்டாமா? அவன்தான் ஆணவக்காரன் ஆயிற்றே! தன்னை விட உயர்ந்தவன் இருக்கக் கூடாது என்று நினைப்பவன். அவனிடமா நம்பெருமைகளைச் சொல்வது? அறிவு களஞ்சிய மய்யா நீர்,'' என்றார் சனீஸ்வரர்.
"நான் என்னவோ சொகுசாக இருப்பதை போலவும், நீங்கள் மட்டும் துயரப்படுவதை போலவும் அல்லவா பேசுகிறீர்கள்.? வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பவன் என்பதை சற்று மறந்து ஆலோசனை சொன்னேன். இப்போது அனுபவிக்கிறேன்,'' என்றார் சுக்கிரன்.

இதனிடையே, மண்டோதரி பிரசவ வலியால் துடித்தாள். சுகப்பிரசவம் ஆவது சிக்கல் என்று வைத்தியர்கள் சொன்னதாக சிறைக்காவலர்கள் பேசியது கிரகங்கள் காதில் விழுந்தது.
"சுக்கிரச்சாரியாரே! எல்லா கிரகங்களும் ஒன்று சேர்ந்தால், அதை "யுத்த கிரகம்' என்பார்கள். அப்படி இருக்கும்போது எதற்காக இப்படி ஒரு யோசனை சொன்னீர்கள்? இப்போது பாருங்கள்! மண்டோதரி பிரசவிக்க முடியாமல் வலியால் வேதனைப்படுகிறாள். அவளுக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதாவது பாதிப்பானால் ராவணன் துளைத்து விடுவான் நம் 
அனைவரையும்,'' என்றார் சனீஸ்வரர்.

"அசுரத் தலைவனிடம் இருந்து தப்பிக்க வழியிருக்கிறதா?'' என்றார் பிரகஸ்பதியான குரு.
"புதிதாக ஒரு உயிரை உண்டாக்கி, அதை ஒரு நேரத்திற்கு அதிபதியாக்கினால், ராவணனின் வாரிசு பிழைக்கும்,'' என்ற சனீஸ்வரர் தியானத்தில் அமர்ந்து, தன் உடலில் இருந்த சக்தியை திரட்டி, ஓர் அழகான குழந்தையை உருவாக்கினார். 
குழந்தைக்கு "குளிகன்' என்று பெயரிட்டார்.

இவன் பிறந்தவுடனேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் ஆகிவிட்டது.
"இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது?'' என சனீஸ்வரரிடம் மற்றவர்கள் கேட்டனர்.
"யுத்த கிரக வேளையில், குளிகனுக்குரிய குளிகை நேரமாக அது அமைந்தால் பிரச்னையில்லாமல் இருக்கும். வானில் இருக்கும் மேகத்தை காற்று கலைத்து விடுவது போல், குளிகன் பிறந்த நேரத்தில் மண்டோதரிக்கு சுகப்பிரசவம் ஆகிவிட்டது,'' என்றார் சனீஸ்வரர்.


குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் வளர்ந்து கொண்ட போகும். கடன் வாங்குவது, பழைய கட்டடங்களை இடிப்பது, இறந்தவர் உடலை எடுப்பது போன்ற காரியங்களை இந்நேரத்தில் செய்யக்கூடாது. கடனை திருப்பி கொடுப்பது, வீடு, நகை வாங்குவது பற்றி பேச்சு நடத்துவது ஆகிய சுபநிகழ்ச்சிகளை செய்தால் நன்மை ஏற்படும்.

வீட்டு பூஜை குறிப்புகள்


வீட்டு பூஜை குறிப்புகள் 


ஆன்மீக அன்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள்.இன்றைய  பதிவில்  வீட்டு பூஜை குறிப்புகளை எழுதினால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று என் உள்ளத்தில் தோன்றியது.அதன் அடிப்படியில் இந்த பதிவை போடுகிறேன்.

 உங்களுக்கு எதையெல்லாம்  செய்ய இயலுமோ அதை  ஆத்மாத்தமாக கடவுளுக்கு செய்து  பயன் பெறுங்கள்,
1 வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.

2. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.

3. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.

4. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள்.

5. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.

6. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி தங்க மாட்டாள்.

7. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.

8. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.

9. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.

10. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.

11. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.

12. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

13. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.


14. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

15. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

16. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.

17. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்பும்போது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.

18. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.



19. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.

எல்லாரும் சந்தோஷமாக இருங்கள்.உங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷப்படுத்துங்கள் 

நன்றி வணக்கம்