வெள்ளி, 9 ஜூன், 2017

குளிகை பிறந்த கதை

குளிகை பிறந்த கதை

அன்பு தோழிகளுக்கு என்  அன்பு நிறைந்த வணக்கங்கள்.என்னுடைய பதிவுகள்  பனுள்ளதாக உங்களுக்கு இருக்கும் என்ற நல்ல எண்ணத்தில்  எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். 
 இதுவே நான் கடவுள் மீது கொண்ட பக்தி எனலாம்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பக்தியை வெளிப்படுத்துவர்.எனக்கு தெரிந்த கருத்துக்களை, கதைகளை இந்த பதிவுமூலம் சொல்லுவதால் மனத்திருப்தியும் , கடவுளின் அனுக்கிரகமும்  கிடைத்தது.கிடைக்கிறது. கிடைக்கும் அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

நீங்களும் உங்கள் குடும்பத்தினரின் நலனுக்காக, உங்களது இஷ்ட கடவுளை  நம்பிக்கையுடன் வணங்குங்கள்.பலனும் அடைவீர்கள் அது திண்ணம். 

குளிகை நேரத்தில் எதை செய்தால் நல்லது என்று அறியும் விதமாக அமைந்ததே இந்த கதை

ராவணன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். காரணம் அவன் தந்தையாகப் போகிறான். குல குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்றான்.
"குருவே! எனக்கு பிறக்க போகும் குழந்தை, பல வித்தைகளில் ஜித்தனாகவும் (வெற்றி வீரன்) எவராலும் வெல்ல முடியாத வலிமை கொண்டவனாக திகழவும் எந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லதென கணித்து சொல்லுங்கள்,'' என்றான்.

“ராவணா! நல்ல கிரகங்கள் எல்லாம் ஒரே ராசி கட்டத்தில் வந்தால் நல்லது. ஆனால், அது எப்போது வருகிறது என யோசித்து யோசித்து தலையே வெடித்துவிடும் போல் இருக்கிறது. சுபகிரகங்களை ஒட்டுமொத்தமாக சிறையில் அடைத்தால் என்ன என்று கூட தோன்றுகிறது,'' என்றார் வேடிக்கையாக.
அப்படி சொன்னது அவருக்கே வினையாகி விட்டது.
“அவ்வளவு தானே! நவக்கிரகங்களையும் ஒன்றாக சிறையில் அடைத்து விடுகிறேன். அதேநேரம், கிரகங்களில் நீங்களும் ஒருவர் என்பதால் உங்களையும் சிறைப்பிடிக்கிறேன்,'' என்றான்.
சுக்கிரன் எனப்படும் சுக்கிராச்சாரியாரையும், மற்ற கிரகங்களையும் சிறையில் தள்ளினான். தங்கள் நிலைக்கு காரணம் சுக்கிராச்சாரியார் என்பதால் அவரை நவக்கிரகங்களும் திட்டித் தீர்த்தன.
"உங்களுக்கு திறமை இருக்கிற அளவுக்கு புத்தி வேண்டாமா? அவன்தான் ஆணவக்காரன் ஆயிற்றே! தன்னை விட உயர்ந்தவன் இருக்கக் கூடாது என்று நினைப்பவன். அவனிடமா நம்பெருமைகளைச் சொல்வது? அறிவு களஞ்சிய மய்யா நீர்,'' என்றார் சனீஸ்வரர்.
"நான் என்னவோ சொகுசாக இருப்பதை போலவும், நீங்கள் மட்டும் துயரப்படுவதை போலவும் அல்லவா பேசுகிறீர்கள்.? வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பவன் என்பதை சற்று மறந்து ஆலோசனை சொன்னேன். இப்போது அனுபவிக்கிறேன்,'' என்றார் சுக்கிரன்.

இதனிடையே, மண்டோதரி பிரசவ வலியால் துடித்தாள். சுகப்பிரசவம் ஆவது சிக்கல் என்று வைத்தியர்கள் சொன்னதாக சிறைக்காவலர்கள் பேசியது கிரகங்கள் காதில் விழுந்தது.
"சுக்கிரச்சாரியாரே! எல்லா கிரகங்களும் ஒன்று சேர்ந்தால், அதை "யுத்த கிரகம்' என்பார்கள். அப்படி இருக்கும்போது எதற்காக இப்படி ஒரு யோசனை சொன்னீர்கள்? இப்போது பாருங்கள்! மண்டோதரி பிரசவிக்க முடியாமல் வலியால் வேதனைப்படுகிறாள். அவளுக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதாவது பாதிப்பானால் ராவணன் துளைத்து விடுவான் நம் 
அனைவரையும்,'' என்றார் சனீஸ்வரர்.

"அசுரத் தலைவனிடம் இருந்து தப்பிக்க வழியிருக்கிறதா?'' என்றார் பிரகஸ்பதியான குரு.
"புதிதாக ஒரு உயிரை உண்டாக்கி, அதை ஒரு நேரத்திற்கு அதிபதியாக்கினால், ராவணனின் வாரிசு பிழைக்கும்,'' என்ற சனீஸ்வரர் தியானத்தில் அமர்ந்து, தன் உடலில் இருந்த சக்தியை திரட்டி, ஓர் அழகான குழந்தையை உருவாக்கினார். 
குழந்தைக்கு "குளிகன்' என்று பெயரிட்டார்.

இவன் பிறந்தவுடனேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் ஆகிவிட்டது.
"இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது?'' என சனீஸ்வரரிடம் மற்றவர்கள் கேட்டனர்.
"யுத்த கிரக வேளையில், குளிகனுக்குரிய குளிகை நேரமாக அது அமைந்தால் பிரச்னையில்லாமல் இருக்கும். வானில் இருக்கும் மேகத்தை காற்று கலைத்து விடுவது போல், குளிகன் பிறந்த நேரத்தில் மண்டோதரிக்கு சுகப்பிரசவம் ஆகிவிட்டது,'' என்றார் சனீஸ்வரர்.


குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் வளர்ந்து கொண்ட போகும். கடன் வாங்குவது, பழைய கட்டடங்களை இடிப்பது, இறந்தவர் உடலை எடுப்பது போன்ற காரியங்களை இந்நேரத்தில் செய்யக்கூடாது. கடனை திருப்பி கொடுப்பது, வீடு, நகை வாங்குவது பற்றி பேச்சு நடத்துவது ஆகிய சுபநிகழ்ச்சிகளை செய்தால் நன்மை ஏற்படும்.

வீட்டு பூஜை குறிப்புகள்


வீட்டு பூஜை குறிப்புகள் 


ஆன்மீக அன்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள்.இன்றைய  பதிவில்  வீட்டு பூஜை குறிப்புகளை எழுதினால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று என் உள்ளத்தில் தோன்றியது.அதன் அடிப்படியில் இந்த பதிவை போடுகிறேன்.

 உங்களுக்கு எதையெல்லாம்  செய்ய இயலுமோ அதை  ஆத்மாத்தமாக கடவுளுக்கு செய்து  பயன் பெறுங்கள்,
1 வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.

2. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.

3. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.

4. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள்.

5. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.

6. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி தங்க மாட்டாள்.

7. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.

8. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.

9. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.

10. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.

11. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.

12. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

13. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.


14. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

15. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

16. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.

17. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்பும்போது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.

18. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.



19. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.

எல்லாரும் சந்தோஷமாக இருங்கள்.உங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷப்படுத்துங்கள் 

நன்றி வணக்கம் 

செவ்வாய், 30 மே, 2017

ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்கள் செய்யவேண்டிய சகஸ்ர நாம அர்ச்சனையும் அதனால் கிடைக்கும் பலன்களும்

ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்கள் செய்யவேண்டிய சகஸ்ர நாம அர்ச்சனையும் அதனால் கிடைக்கும் பலன்களும் 


ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்கள் செய்யவேண்டிய சகஸ்ர நாம அர்ச்சனையும் அதனால் கிடைக்கும் பலன்களும் 




1.மேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் !


ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே ஸிவாத் மஜம்


2.ரிஷப ராசி: ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யைஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ


3.மிதுன ராசி: மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:


4.கடக ராசி: கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:


5.சிம்ம ராசி: சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம:


6.கன்னி ராசி: கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்
ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம:


7.துலா ராசி: துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்
ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம:


8.விருச்சிக ராசி: விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
தரணி கர்ப்ப ஸம்பூதம்வித்யுத் காந்தி ஸமப்ரதம்குமாரம் சக்தி ஹஸ்தம்சமங்களம் ப்ரணமாம்யஹம்.


9.தனுசு ராசி: தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.
ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம:


10மகர ராசி: மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:


11.கும்ப ராசி: கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.
ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம:


12.மீன ராசி: மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.
ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:



செவ்வாய், 9 மே, 2017

அகல் விளக்கின் நவகிரக தத்துவம்

அகல் விளக்கின் நவகிரக தத்துவம்


அகல் விளக்கின் நவகிரக தத்துவம்
கோயில்களிலும் ,வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம். இதன் அர்த்தம் தெரிந்து கொள்வோம் .
1). அகல் விளக்கு = சூரியன் ஆகும்
2.) நெய்/எண்ணெய்-திரவம் = சந்திரன்
3.) திரி = புதன்
4). அதில் எரியும் ஜ்வாலை =செவ்வாய்
5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு
6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = குரு
7). ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கர =சனி
8). வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = கேது
9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை); அதாவது ஆசையை குறைத்துக்கொண்டால் சுகம் என அர்த்தம்

ஆசைகள் நம்மை அழிக்கிறது ; மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது.

கோவிலும்,நவகிரக தீப வழிபாடும் 



* சூரியனார் கோவிலில் 11 தீபங்கள் ஏற்றி வழிபட்டால், நோய்கள் விலகி ஓடும்.* திங்களூரில் 10 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் கவலைகள் அகலும்.* வைத்தீஸ்வரன் கோவிலில் 9 தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட்டால், திருமணம் கைகூடும்.* கல்வியில் சிறப்புற்று விளங்க, திருவெண்காட்டில் 9 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்யலாம்.* நாக தோஷம் நீங்க, ஆலங்குடியில் 28 தீபங்கள் ஏற்றி வழிபடுவது நல்லது.* திட்டை குரு தலத்தில் 33 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால், புத்திர பாக்கியம் கிட்டும்.* திருநள்ளாறு தலத்தில் 9 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் ஆயுள் பெருகும்.* திருநாகேஸ்வரத்தில் 21 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் வாக்கு வன்மை உண்டாகும்.* கீழப்பெரும்பள்ளத்தில் 9 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் மோட்சம் கிடைக்கும்.* கஞ்சனூரில் 11 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் நல்ல மனைவி அமைவாள்.

திங்கள், 8 மே, 2017

ஸ்ரீ ஆஞ்சநேயர் கவசம்

ஸ்ரீ ஆஞ்சநேயர் கவசம்


அஞ்சனை மைந்தன் அனுமனை போற்ற
நெஞ்சினில் வரும் பலம்
வஞ்சனை தீர்க்கும் வாயுவின் மகனால் 
வல்வினை தீரும் நிஜம்

சீரஞ்சீவி அனுமன் என் சிரசினை காக்க
ஸ்ரீ ராம பக்தன் என் சீர் சடை காக்க
நெறி மேவி நின்றவன் என் நெற்றியை காக்க
புவியினில் நீண்டவன் என் புருவங்கள் காக்க

இமயத்தில் நிற்பவன் என் இமைகளைக் காக்க
சமயத்தில் வந்தெனை சடுதியாய் காக்க
வீரத்தின் வீரன் என் விழிகளை காக்க
வீசிடும் காற்றோன் என் விழி மூடி காக்க

நாரணப் பிரியன் என் நாசியை காக்க
காரணப் பொருளே என் காலமே காக்க
முழுஞானம் கொண்டவன் என் மூக்கினை காக்க
முன்நின்ற வானரன் என் வாயினை காக்க

வெற்றிலை பிரியன் என் வெற்றியை காக்க
பற்றியே வந்தெனை பற்றுடன் காக்க
பல் நலம் கொண்டவன் என் பற்களைக் காக்க
நல் மனம் கொண்டவன் என் நாவினைக் காக்க

நாடியே வந்தவன் என் நாடியை காக்க
தேடியே வந்தென்னை தேவனே காக்க
கரிமலை கடந்தவன்-என் கன்னங்கள் காக்க
கடுகதியில் வந்தென் கழுத்தினை காக்க

கையிலையின் வாசன் என் கைகால்கள் காக்க
கதிரொளியாய் வந்து கருணையாய்க் காக்க
நல்லன செய்பவன் என் நகங்களைக் காக்க
அல்லனதீர்ப்பவன் என் அகம் தனை காக்க

நெடு மேனியானவன் என் நெஞ்சினைக் காக்க
சுடுமேனி யாய் வந்த சூட்சுமம் காக்க
இடுக்கண் கழைபன் என் இடுப்பினை காக்க
இரு கண்ணின் மணிகளை இருட்டிலும் காக்க

தோழமை கொண்டவன் என் தோழ்களை காக்க
தோன்றிய புகழவன் என் தோலினைக் காக்க
குரங்கினத் தவைவன் என் குறியினைக் காக்க
குருவாகி வந்து என் குருதியை காக்க

திசையெலாம் திரிந்தவன் என் தசையினை காக்க
விசையெனப் பாய்ந்து என் செவிகளை காக்க
நடுவாகி நின்று என் முதுகினை காக்க
நவின்றிடும் தேவன் என் நரம்புகள் காக்க

ஒன்பது வாசலை ஓப்பிலா காக்க
புண்படா வண்ணமே புவனமே காக்க
இளமையும் முதுமையும் இனியவா காக்க
இரவிலும் பகலிலும் என்றும் நீ காக்க

உலகத்தின் நாயகன் என் உயிரினைக் காக்க
கலகத்தில் இருந்தென்னை கதி தந்து காக்க
நிலையற்ற வாழ்வினில் நிமலனார் காக்க 
சிலையற் இருந்தென்னை சீலனார் காக்க

இராமனின் பக்தன் என் இதயத்தை காக்க
சுக்ரீவன் தோழன் என் சுவாசத்தை காக்க
உடல் உள்ளம் என்றுமே உறுதியாய் காக்க
கடல்தாண்டி வந்தவன் என் குடல்களைக் காக்க

வளமிக்க வாழ்வினை வளத்துடன் காக்க 
வாழையடி வாழையாய் வாழ்திடக் காக்க
எம்மை எந்நாளும் உன் நிழலினில் காக்க
இம்மையிலும் மறுமையிலும் ஈடிலா காக்க

நோய் நொடிகள் வாராமல் நொடியினில் காக்க
தாய் மடியில் தவழ்ந்தயென் மேனியை காக்க
நவகோளின் தோசங்கள் நீக்கி நீ காக்க
தவக்கோலம் கொண்டவன் தரணியை காக்க

தீராத நோய்களைத் தீர்த்து நீ காக்க
வாராத செல்வங்கள் வந்திடக் காக்க
ஈரேழு புவனத்து உறவுகள் காக்க
பாராளும் மன்னர்கள் நட்புகொள் காக்க

பஞ்ச பூதங்கள் எனை பகைக்காது காக்க
வஞ்சங்கள் இல்லாது மனம் தனை காக்க
பில்லி பேய் சூன்யங்கள் அணுகாது காக்க
பிள்ளை என்றன்பாய் பிரியமாய் காக்க

அரக்கர்கள் பூதங்கள் அண்டாமல் காக்க
இரக்கமறு மாந்தர்கள் பகை இன்றி காக்க
சிறை சென்று வாடாமல் சீருடன் காக்க
மறையெலாம் போற்றும் உன் பொன்னடிகள் காக்க

இல்லாமை நீக்கி எனை இறைவா நீ காக்க
நில்லாத பசி எனை அண்டாது காக்க
கடன் தொல்லை தீர்த்தெனை கருணையே காக்க
கலியுகக் கொடுமைகள் கழிந்திடக் காக்க

செய்தொழில் கருமங்கள் செய்வதை காக்க
மெய் வருந்தாமல் எனை மேன்மையாய்க் காக்க
புலத்திலும் நிலத்திலும் புகழனார் காக்க
தலத்திலே வந்து உன் தனையனை காக்க

கொடுவிச யந்துக்கள் கொட்டாது காக்க
கொடுமைகொள் நுண்ணுயிர் வாட்டாது காக்க
வானமும் வையமும் வளம் பெறக் காக்க
தானமும் தர்மமும் தழைத்திடக் காக்க

நல்லோர்கள் உறவுகள் நலிவின்றி காக்க
வல்லோரும் எனை கண்டு வணங்கிட காக்க
கனவிலும் நனவிலும் கருத்துடன் காக்க உன் 
நினைவுகள் நீங்காது நிலைபெறக் காக்க

மானத்தில் பங்கங்கள் நேராது காக்க
ஊனத்தில் துவண்டிங்கு வாடாது காக்க
நீள் ஆயுள் நிறைசெல்வம் தந்தெனை காக்க
வால் கொண்ட மணியினால் வந்தென்னை காக்க

மரணத்தின் வாசலில் மாருதி காக்க
சரணத்தை தந்தெனை மரணத்தில் காக்க
பிறவிப் பிணியதை தீர்த்து நீ காக்க
பிறவாமை தந்தெனை பிரியாமல் காக்க

முனிவரும் தேவரும் எனக் அருள் செய்ய
பனிதரும் திங்களின் மூலனே காக்க
இனிவருங் காலங்கள் இனித்திட காக்க
பிணிவருந்தாமல் என் துணிவினை காக்க

பார்க்க நீ பார்க்க பாவங்கள் போக்க
தீர்க்க நீ தீர்க்க தீ வினைகள் தீர்க்க
வார்க்க நீ வார்க்க உன் அருளினை வார்க்க
காக்க நீ காக்க உன்கதி தந்து காக்க

ஆஞ்சநேயனே காக்க வாயுதேவனே காக்க
வீர அனுமனே காக்க ராம பக்தனே காக்க

ஸ்ரீ ராம பக்தனே காக்க காக்க.

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

கடவுள் பக்தியால் பலன் கிடைக்குமா?

கடவுள் பக்தியால் பலன் கிடைக்குமா?


நாம் விரும்பியது கிடைத்தால் சந்தோஷம்; எதையாவது இழந்தால் துக்கம். வாழ்க்கை இப்படி போய்க் கொண்டிருக்கிறது. குழந்தை பிறந்து விட்டால் மகிழ்ச்சி; யாராவது இறந்து விட்டால் துக்கம். இதெல்லாம் எத்தனை நாளைக்கு? காலத்தால் மறக்கக் கூடியவை தான். “உறவினரின் மரணத்துக்காக அழாதே; கடவுளின் தரிசனத்துக்காக அழு…’ என்றனர். கடவுளின் தரிசனம் கவலையைப் போக்கி, கண்ணீரைத் துடைப்பதுடன், பிறவியே இல்லாத முக்தி நிலையை அளிக்கும்.

துளசிதாசர் ஒரு ராம பக்தர். கங்கா தீரத்தில் உலவிக் கொண்டிருந்தார். ஒரு மயானம் குறுக்கிட்டது. அங்கு ஒரு இளம்பெண், இறந்து போன தன் கணவனது அருகில் அமர்ந்து, அழுது கொண்டிருந்தாள். தாசரைக் கண்டதும் ஓடி வந்து வணங்கி, “என் கணவர் போன இடத்துக்கு, நானும் செல்ல வழி காட்டுங்கள்…’ என்றாள்.
“அவளிடம், மோட்சத்தை உண்டாக்கிய அந்தக் கடவுள் இவ்வுலகிலும் இருக்கிறான்…’ என்றார் துளசிதாசர். அதற்கு அவள், “நான் மோட்சத்தை விரும்பவில்லை; என் கணவர் அருகில் இருக்க விரும்புகிறேன்…’ என்றாள். “நீங்கள் வீட்டுக்குப் போங்கள்… இன்னும் ஒரு மாதத்தில், உங்கள் கணவர் திரும்பி வந்து விடுவார்…’ என்றார் துளசிதாசர். அவளும் போய் விட்டாள். அன்று முதல் அந்த பெண்ணின் வீட்டுக்கு போய், “உலகம் மாயை, அநித்யமானது!’ என்று பக்தியின் பெருமைகளைப் பற்றி உபதேசித்தார் தாசர். அவளுடைய மனதில் துக்கம் மறைந்து, பக்தி குடி கொண்டது. சதா காலமும் ராமனையே தியானித்து, மற்றவைகளை மறந்தாள்; துக்கமும் போய் விட்டது.


மாதக் கடைசியில் அவளுடைய சிநேகிதி இவளிடம் வந்து, “உன் கணவர் திரும்பி வந்து விட்டாரா?’ என்று கேட்டாள். “ஆம்!’ என்றாள் அவள். “எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டாள் சிநேகிதி. தன் நெஞ்சில் கை வைத்து, “அவர் என் நெஞ்சில் குடி கொண்டுள்ளார்!’ என்றாள் அந்த பெண். பக்தி மேலீட்டால் கணவன் போன துக்கத்தை மறந்து, நெஞ்சில் கடவுளுக்கு இடமளித்து விட்டாள். கடவுளைப் பற்றிய ஞானத்தை அவளுக்கு தாசர் உபதேசித்து விட்டதால், அவளும் உலக விஷயங்களிலிருந்து விடுபட்டு, ஞானம் ஏற்பட்டு கடவுளிடம் மனதை வைத்து, காலங்கழித்து முக்தியடைந்தாள் என்று ஒரு கதை உண்டு.


பிறவி என்பது, கர்ம வினையை அனுபவிப்பதற்காக ஏற்பட்டது. அதை அனுபவித்ததும், அவரவர்கள் போக வேண்டியது தான். வந்த காரணமும் தெரியாது; போன காரணமும் தெரியாது. ஞானம் வந்து விட்டால், ஏதோ வந்தான், போனான் என்றிருப்பர்; அது இல்லையேல், அழுது புலம்பிக் கொண்டிருப்பர். அழுது புலம்பினால் போனவன், வருவானா? நாமும் ஒருநாள் இப்படிப் போக வேண்டியவன் தானே என்று, மனதை சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்.

பலராம ஜெயந்தி!


பலராம ஜெயந்தி!

பெருமாளின் அவதாரங்களில் இது 8வது அவதாரமாகும்: கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர். 

அசுரர்களே அரசுபரிபாலனம் செய்தனர் என்றாலும் அவர்களை விட்டு ஆணவம் குறையவில்லை. அதனால் அவர்களுடைய பாரம் பூமிதேவியை வருந்திற்று. அவள் தன் குறையைப் பிரம்ம தேவனிடம் முறையிட்டாள். பிரம்மா பாற்கடலுக்குப் போய் புருஷக்தம் என்ற மந்திரத்தால் தேவர்களுடன் கூடிப் பரந்தாமனைத் துதித்தார். அப்போது ஓர் அசரீரி வாக்கு அவர்களுக்கு கேட்டது. பிரம்மதேவனே! தேவர்களே! பூமியின் துயரத்தை நான் அறிகிறேன். தேவர்கள் யதுகுலத்தில் பிறக்கட்டும். தேவமாதரும் கோபியராக அங்கு ஜனனம் செய்யட்டும். நீங்கள் யது குலத்தில் பிறந்து என் வரவுக்காகக் காத்திருங்கள்! என்று கட்டளை பிறந்தது. அதன் பின் தன் லோகத்திற்கு அவர்கள் போயினர். 

சூரசேனன் என்ற அசுரன் மதுரையை ஆண்டு வந்தான். மத்ரா என்றும் மதுரையைக் கூறுவார்கள். சூரசேனனுக்கு ஒரு தம்பி. அவன் பெயர் உக்கிரசேனன். அவன் மகன் கம்ஸன். ராஜகுமாரியாகிய தேவகிக்கும், வசுதேவர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் ஆனதும் தம்பதியர் திருமண மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக வீடு திரும்ப ரதத்தில் ஏறினார்கள். அந்த ரதத்தை ஓட்டுவதற்கு தேவகியின் சிற்றப்பா மகனும் அண்ணனுமாகிய கம்ஸன் குதிரைகளின் கடிவாளத்தைக் கையில் பிடித்தான். ஊர்வலம் சீரும் சிறப்புமாக மங்கள வாத்தியங்கள் முழங்க வந்து கொண்டு இருந்தது. அப்போது கம்ஸனுக்கு ஓர் அசரீரி கேட்டது. மதியற்றவனே! கம்ஸா, கேள்! உன் தங்கை தேவகிக்கு நீ ரதசாரதியாக இப்போது இருக்கிறாய். அந்த ராஜகுமாரியின் எட்டாவது குழந்தை உன் உயிரை வாங்கப் போகிறது என்று அசரீரி சொல்லியது. அப்போதே கம்ஸன் தேவகியைக் கொன்று விட்டால் தன் மரணப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும் என்று வாளை உருவி அவளைக் கொல்லப் போனான். அப்போது தேவகியை மணந்த வசுதேவன் கம்சனிடம் நல்ல வார்த்தை சொல்லி, நீ என் மனைவியாகிய புதுமணப் பெண்ணை, மணக்கோலம் கலையாது இருக்கும் கன்னியைக் கொல்லும் பாவம் மிகவும் கொடியது. மேலும் அசரீரி இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளால் தானே உனக்கு மரணம் வரும் எனச் சொல்லியது? நான் இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளை உன்னிடம் கொடுத்து விடுகிறேன். நீ அவற்றை உன் இஷ்டப்படி வதம் செய்வதானால் செய்து கொள்! என்று தன் மனைவிக்கு வந்த ஆபத்தை நீக்கி கொண்டார். சிசுக்கள் பிறந்தவுடன் இதைப்பற்றி முடிவு செய்து கொள்வோம் என்று வசுதேவர் தீர்மானித்து அப்படிச் சொன்னார். அதனால் சினம் தணிந்த கம்ஸன் தேவகியை விட்டுவிட்டான்.

ஒருநாள் நாரதர் கம்சனை சந்தித்து, ஆயர்பாடியில் தேவர்கள் அவதரித்திருக்கிறார்கள். அவர்களுடைய தலைவன் நந்தனும், யாதவரும் உனக்குப் பகைவர் என்று சொல்லி புவியின் பாரம்தீர பிரம்மாவால் செய்த ஏற்பாட்டையும் எடுத்துச் சொன்னார். உடனே கம்ஸன் தந்திரமாக வசுதேவரையும், தேவகியையும் சிறையிட்டான். அவர்களுடன் தன் தந்தை உக்கிரசேனனையும் சிறையில் அடைத்து ராஜ்ஜியத்தையும் தான் ஏற்றுக் கொண்டாள். தன் அசுர நண்பர்களுடன் சேர்ந்து யதுகுலத்தாரை அழிப்பதிலேயே குறியாக இருந்தான். அதனால் யதுக்கள் பயந்து வேற பல நாடுகளில் போய் தங்கினார்கள். தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றான். ஏழாவது சிசுவை தேவகி கருத்தரித்தாள். அந்தக் கருவில் ஆதிசேஷனே உருவானான். அச்சமயம் மகாவிஷ்ணு தனது யோக மாயை மூலம் ஓர் ஏற்பாடு செய்தார். அவர் தேவியை வரவழைத்து, தேவி! வசுதேவருக்கு ரோகிணி என்ற வேறு ஒரு மனைவி உண்டு. அவளை அவர் ஆயர்பாடியில் ரகசியமாக ஒளித்து வைத்திருக்கிறார். மதுராபுரியில் சிறையில் வாடும் தேவகியின் வயிற்றில் ஆதிசேஷன் கருக்கொண்டிருக்கிறான். நீ அந்தக் குழந்தையை ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றி விடு. அத்துடன் நீ நந்தகோபன் மனைவி யசோதையிடம் பெண்ணாகப் பிறக்க வேண்டும். நான் தேவகியின் வயிற்றில் திருஅவதாரம் செய்யப் போகிறேன். இதனால் சகல மனோ பீஷ்டங்களையும் அளிப்பதற்குக் காரணமானவளாக ஈஸ்வரியாக காளி, வைஷ்ணவி என்றும் பின்னர் மக்கள் உன்னை வழிபடுவார்கள் என்றார். பரந்தாமன் கட்டளைப்படி மாயாதேவி தேவகியின் கர்ப்பத்திலிருந்து குழந்தையை ரோகிணி கர்ப்பத்திற்கு மாற்றினாள். தேவகியின் கர்ப்பம் அவள் சிறையில் வாடும் வேதனையிலும் கம்ஸன் தரும் தொல்லைகளாலும் சிதைந்து போயிற்று என அனைவரும் கம்சனை ஏசினார்கள்.

இச்சமயம் ரோகிணியின் மைந்தனாக ஆதிசேஷன் பிறந்தான். அவனுக்கு யதுகுல குருவாகிய கர்கர் மிகவும் ரகசியமாகப் பசுமடத்தில் சடங்குகளை செய்து ராமன் என்று பெயரிட்டார். ராமன் என்றால் சமிக்கச் செய்வான். தவிர இவன் நல்ல பலசாலியாக இருப்பான் என்பதால் இவனை பலராமன் எனப் பெயரிட்டு அழைப்போம் என்றார் கர்கர். நரகாசுர வதத்தைக் கிருஷ்ணன் செய்த நாளைத்தான் நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம் என்று ஒரு சிலர் சொல்வதுண்டு. அந்த நரகாசுரனுக்கு துவிவிதன் என்ற ஒரு வானரத்தலைவன் இருந்தான். அவனுக்கு மயிந்தன் என்ற சகோதரன் உண்டு. கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்றதைக் கண்டு வானரத் தலைவன் கடும் கோபம் கொண்டான். அவன் தான் எப்படியும் கிருஷ்ணனைக் கொன்று விடுவதாகச் சொல்லி பல அட்டகாசங்களைச் செய்தான். அந்த வைராக்கியத்தில் நேரே கோவர்த்தனகிரியை அடைந்தான். அங்கே தவம் செய்து கொண்டு இருந்த மகரிஷிகளை அவன் அடித்தும் உதைத்தும் இம்சை செய்தான். அந்த நேரத்தில் ரைவத மலையில் பலராமன் கோபியர்களுடன் ஆனந்தமாக இருந்தான். அதைப் பார்த்த வானரத் தலைவன், பலராமன் மீது பாய்ந்தான். அவன் அணிந்திருந்த பட்டு பீதாம்பரத்தைப் பற்றி இழுத்துக் கிழித்தான். சுக்கல் சுக்கலாகக் கிழித்து தூர எறிந்தான். மரத்தை வேரோடு பிடுங்கி பலராமனுடன் இருந்த கோபியரை அடித்து விரட்டினான். இதைப் பார்த்ததும் பலராமனுக்குக் கோபம் வந்தது. உடனே வானரனைக் கட்டிப் பிடித்தான். அச்சமயம் அவன் பலராமனை முஷ்டிகளால் குத்தித் தள்ளித் துன்புறுத்தினான். ஆனால் பலராமனோ அவனைப் பிடித்து கைமுஷ்டியால் அவன் தலையில் ஒரு குட்டு குட்டினான். அந்த க்ஷணத்திலேயே அவன் மூக்கிலும் வாயிலும் ரத்தம் ஒழுக அந்த இடத்திலேயே இறந்தான். இதே போல கோவர்த்தன கிரியில் பலராமன் கண்ணனுடன் மாடு மேய்த்து வந்தான். அப்போது ஸ்ரீதாமன் என்ற சிறுவன் வேகமாக பலராமன், கண்ணனிடம் ஓடி வந்தான்.

பலராமா! கண்ணா! இந்த மலைச்சாரலைக் கடந்து நாம் மலைக்காட்டிற்குள் போனால் அங்கே அநேக பனைமரங்களைக் காணலாம். அந்த பனைமரத்தின் அடியில் பழங்கள் உதிர்ந்து கிடப்பதைப் பார்க்க முடியும். ஆனால் அங்கே நாம் போக முடியாது. காரணம் தேனுகன் என்ற அரக்கன் அந்த வனத்தைக் காத்து வருகிறான். அவன் கழுதை வேடம் போட்டுத் திரிகிறான். அவனைச் சேர்ந்தவர்களும் அது மாதிரியே அவனுடன் காட்டைச் சுற்றி வருகிறார்கள். அவனுக்கு மனித மாமிசம் என்றால் மிகப் பிரியம். அவன் பக்கத்தில் போனவர்களை அடித்துக் கொன்று தின்றுவிடுவான். எனினும் அவன் வசிக்கும் பனைக்கூட்டத்தின் மத்தியில் சிந்தி சிதறிக் கிடக்கும் பழங்களின் வாசனை தான் இது. கண்ணா! அந்த பழங்களை எப்படியாவது எடுத்து வந்து எங்களுக்கு கொடுப்பாயா? என்று ஸ்ரீதாமன் கேட்டான். இதைக் கேட்ட பலராமனும் கண்ணனும் சிரித்தார்கள். வாருங்கள்! நாம் எல்லோரும் பனங்காட்டிற்குச் செல்லலாம் என்று கண்ணன் சொல்லவே கோகுலச் சிறுவர்களும், பலராமனும் அவனுடன் சேர்ந்து அங்கே போனார்கள். இவர்கள் பேசியதைக் கேட்ட தேனுகன் வேகமாக ஓடிவந்து பலராமனைத் தாக்க ஆரம்பித்தான். கழுதையாகிய அவன் தன் பின்னங்கால்களால் பலராமனை உதைத்தான். பலராமனோ கழுதையின் காலைப் பிடித்து இழுத்து அப்படியே உயரே தூக்கி சுழற்றினான்.  இப்படி பலமுறை சுற்றிச் சுழல விட்டு அவன் சடலத்தை பனைமரத்தின் மீது வீசினான். அந்த மரம் அல்லாது அடுத்து இருந்த மரங்களும் அவனோடு பூமியில் சரிந்தன. இவ்வாறு பலராமனும், கிருஷ்ணனும் அரக்கர் கூட்டத்தை அழித்து ஒழித்தனர்.