சிவபெருமான் உமையம்மையோடு திருவிளையாடல்
“ஒரு காலத்துல உமையம்மை காஞ்சிபுரத்துல, கம்பையாற்றில் மணலால் சிவலிங்கம் அமைத்துப் பூசித்தாராம்.”
“ஒரு காலத்துல உமையம்மை காஞ்சிபுரத்துல, கம்பையாற்றில் மணலால் சிவலிங்கம் அமைத்துப் பூசித்தாராம்.”
“அவங்க ரெண்டு பேரும் ஒண்ணுதான்னு சொல்லிக் கொடுத்திருக்கீங்களே தாத்தா, பின்ன ஏன் அவங்க பூசை செய்யணும்?”
“நல்ல கேள்விதான்! உமையம்மை நம்மளை இந்த பூமிக்கு அனுப்பிச்சா மட்டும் போதுமா? எப்படி வாழணும்னு சொல்லிக் கொடுக்க வேண்டாமா.. அதைத்தான் நமக்காக அவங்க செஞ்சு காண்பிச்சாங்க…!”
“சிவபெருமான் உமையம்மையோடு திருவிளையாடல் புரியத் திருவுளங் கொண்டு கம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு வருமாறு செய்தாராம். அம்பிகை அதைப்பார்த்துட்டு, சிவலிங்கம் கரைந்து சிதையாமல் இருக்கறதுக்காக, அந்த சிவலிங்கத்தைத் தன்னோட இரு கைகளாலும் மார்போடு தழுவிக்கிட்டாங்களாம்”.
“பெருமான் மனங் குழைந்து அம்மையோட தனத் தழும்பும் கைவளைத் தழும்பும் அவர்மீது தோன்ற வெளிப்பட்டு நின்றாராம். உமையம்மைக்கு அருள் புரிந்ததோடு அவங்ககிட்ட இரு நாழி நெல்லளித்தாராம்.”
“நெல்லு தெரியும். அது என்ன இருநாழி…?”
“நாழின்றது ஒரு அளவு முறைம்மா. லிட்டர்ன்னு இப்ப சொல்றீங்களே அதைப் போல. இன்னிக்கு கணக்குல ஒரு நாழி நெல் என்பது சுமார் ஒன்றே கால் லிட்டர். ஆக, சிவபெருமான் உமையம்மைக்குக் கொடுத்தது, இரண்டரை லிட்டர் நெல்.…!”
“கொடுத்த நெல்லைக் கொண்டு அறச்செயல்களை மக்களுக்கு கற்றுக்கொடுத்து காஞ்சிபுரத்துல நீ இருன்னு சொன்னாராம். அம்பிகை அந்நெல்லை அந்நாட்டு வேளாளர்களிடம் கொடுத்து, உழவுத்தொழிலைப் பெருக்கி, பல அறச்செயல்களை செய்து வந்தாராம்…!”
“அறம்னு சொன்னீங்களே, அறம்னா மத்தவங்களுக்கு தருமம் செய்யறதுதானே தாத்தா”
“அறத்திற்கு அவ்வளவு சாதாரணமா விளக்கம் கொடுத்துட முடியாதும்மா. சுருக்கமாகச் சொல்லணும்னா நமக்கு மட்டும் எது நன்மைன்னு பார்க்காம, சமூகத்திற்கும் நன்மை கிடைக்கறதுமாதிரி வாழணும். காமாட்சி அம்மை அதன்படி 32 அறங்களைச் செய்தாங்கலாம்”.
“அப்ப அறங்கள் மொத்தம் 32 தானா?”
“அப்படியில்லைம்மா… இப்படியெல்லாம் அறங்கள் செய்யலாம்னு எடுத்துக்காட்டா 32 செய்தாங்களாம். அதன் அடிப்படையை புரிஞ்சிகிட்டு வாழ்ந்தோம்னா நம்ம வாழ்க்கையே அறவாழ்க்கையா ஆகிடும்.”
“ஏன் தாத்தா அறச்செயல்கள் செய்யணும்? நாம நம்மள மட்டும் பாத்துக்கிட்டா போதாதா…?
“வாழ்க்கையின்றது தனி ஒருவனைச் சார்ந்தது இல்ல. சமூகத்தையும் உள்ளடக்கியதுதானே. அதுமட்டுமில்லாம அறச்செயல்களை தொடர்ந்து செய்து வரும்போது அறமானது அன்பில் கொண்டுவிடும். அதற்கப்புறம் அன்பானது அருளிடம் கொண்டு சேர்க்கும். அருளிடம் சேர்ந்தால் அருள் தவத்தில் சேர்க்கும். தவமானது சிவத்தில் சேர்ந்துவிடும்.!”
“ஓ..! சிவத்தோட சேர்றதுக்குதான் ‘அறம் செய விரும்புன்னு’ ஒளவைப்பாட்டி ஒரே வரியிலே சொன்னாங்களோ… இப்பத்தான் புரியுது தாத்தா. அந்த 32 அறங்கள் என்னென்ன தாத்தா?”
“ஏழை எளியோருக்கு துணி துவைக்க உதவுவது, அவர்கள் ஆடைகளை வெளுத்துக் கொடுத்து உதவுவது, ஏழை எளியோருக்கு முடிவெட்டிக்கொள்ள, முகச்சவரம் செய்ய உதவுவது, ஒருவர் தங்களை ஒழுங்குபடுத்தி சரி செய்துகொள்ள கண்ணாடி கொடுத்து உதவுவது, பெண்கள் காதணியில்லாது (தோடு) இருக்கும் பட்சத்தில் (குறைந்த பட்ச நகைகள்) அவர்களுக்கு காதணி வாங்கித் தந்து உதவுவது, பெண்கள் தங்கள் கண்களை அழகுபடுத்திக்கொள்ள கண்மருந்தான கண்மை அளிப்பது, நோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வீடு கட்டி தந்து அன்பாக மருந்தளிக்கிறது, படிக்கிறவங்களுக்கு நல்ல முறையில் கல்வி புகட்டி அவர்களுக்கு உணவு அளிப்பது, பசுக்களை தெய்வமாக பாவித்து அவற்றுக்கு உணவளிப்பது, சிறையில் அடைக்கப் பட்டிருப்பவர்களுக்கு நல்ல உணவளிப்பது, சமய வேறுபாடின்றி அனைவருக்கும் உணவு வழங்குவது. அப்புறம்…..!”
“ஓ…! சமபந்தி போஜனம் காமாட்சியம்மா கத்துகொடுத்துதானா? ஆச்சரியமாய் இருக்கே…!”
“ஆமாம்மா..! அப்புறம் இரப்பவர்க்கு ஈதல். யாசகம் கேட்டு வருபவர்களுக்கு ‘இல்லை என்று சொல்லாமல் இயன்ற உதவி செய்வது, வழிப்போக்கர்களுக்கு உணவு வழங்கி அவர்களது பசியை தீர்ப்பது, ஆதரவற்ற அனாதைகளுக்கு உணவளிப்பது, குழந்தைகளை பராமரித்து அவர்களை வளர்ப்பதில் உதவுவது! ஆதரவற்றவர்களின் உடலுக்கு ஈமச்சடங்கு செய்ய உதவுவது, ஆதரவற்றவர்களுக்கு தேவையான துணிமணிகள் மற்றும் ஆடைகள் கொடுத்து அவர்கள் மானம் காப்பது, கோயிலுக்கு சுண்ணம் இடித்துக் கொடுப்பது, நோயில தவிக்கிறவங்ககளுக்கு மருந்து வாங்கித் தந்து உதவுவது…! பெண்கள் பிரசவிக்கும் நேரத்தில் அவர்கள் உடனிருந்து தேவையான உதவிகளை செய்வது..! ”
“பிரசவத்திற்கு இலவசம்னு ஆட்டோவிலோ எழுதியிருக்கும். அப்போ காமாட்சியம்மா ஆட்டோ காரங்களுக்கும் அறச்செயல்களைக் கத்துக்கொடுத்திருக்காங்க இல்லயா..”
“அகில உலகங்களையும் படைத்து, காத்து ஆட்டுவிக்கறவ நம்ம அம்பிகை அனைவருக்குமாகத்தான் கத்துக்கொடுத்துருக்காங்க. இன்னும் இருக்கு கேளு…, தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்குப் பாலளிப்பது, அனாதைகள் மற்றும் பரட்டை தலையோடு இருக்கும் ஏழை எளியோருக்கு தலைக்கு எண்ணை வாங்கி கொடுப்பது, தனக்குரிய பெண்ணிடம் முறையான இன்பம் அனுபவிக்க வழியில்லா ஏழைகளுக்கு உரிய தனியிடம் அமைத்து தருவது, காயமோ நோயோ ஏற்பட்டு துன்பப்படுபவர்களுக்கு உதவுவது, தாகத்தால் தவிப்பவர்களுக்கு தண்ணீர் தந்து உதவுவது, வழிப்போக்கர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள, குளிக்க, இயற்கை உபாதையை தணித்துக்கொள்ள சாலையோரங்களில், விடுதி அமைப்பது.”
“இயற்கை உபாதையைத் தணிக்க இப்பல்லாம் கட்டண கழிப்பிடமாக் கட்டி அதிலயும் காசு பண்ண ஆரம்பிச்சிட்டாங்களே தாத்தா ...”
“ரொம்ப லென்த்தியா போய்க்கிட்டு இருக்குது அப்பா..! நாம எதுக்காக இந்த டாபிக்கை ஆரம்பிச்சமோ அதை விட்டு விலகிப்போயிட்டீங்க நினைக்கிறேன்..!” என்றாள் அமுதா.
“எங்கயும் விலகலம்மா..! இந்த புராணங்களெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சிருந்ததுன்னா நான் நேரடியா விஷயத்துக்கு வந்திருப்பேன்… தெரியல அதனால அடிப்படையில இருந்து சொல்ல வேண்டியிருக்கு.” என்றவர் “கேளுங்க…! வழிப்போக்கர்கள் நீர் அருந்தி இளைப்பாற குளம் தோண்டுவது, அவற்றை பராமரிப்பது, நிழல் தரும் மரங்கள் மற்றும் பூஞ்சோலை அமைத்து அவர்கள் தங்கி இளைப்பாற உதவுவது, ஆ உரிஞ்சு தறி நிறுவுவது : பசுக்கள் மேயும் இடங்களிலும், பசு கொட்டில்களிலும் அவை தங்கள் உடலை தேய்த்துக்கொள்ள பசு உராய்ஞ்சிக்கல் நிறுவவது, பசுக்களை சினைப்படுத்த தரமான எருதுகளை கொடுத்து உதவுவது மற்றும் எருதுகளை பேணுவது, பல்வேறு விலங்கினங்கள் பசியாற உணவை கொடுத்து உதவுவது, கொலைக்குச் செல்லும் உயிர்களை வாங்கிக் காப்பது, வரன் தேடிக் கொடுத்து உதவுதல். ஏழைப் பெண்களின் திருமணத்திலும் திருமண வயது நெருங்கியும் திருமணமாகாமல் தவிக்கும் முதிர்கன்னிகளுக்கும் திருமணம் செய்து வைத்து உதவுவது… இப்படி 32 அறங்களையும் காமாட்சி அம்மா செய்து காட்டியிருக்காங்க.
*********
மாலை நேரம் நெருங்கவே வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்ட ஈசுவரி அம்மாளும் விளக்கேற்றுவதற்காக விளக்கில் திரி வைத்து எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தார்.
“ஏன் திருமணத்துல காமாட்சியம்மன் விளக்கு கொடுக்கறோம்ங்கறதுதான டாபிக்... சொல்றேன். எப்படி அம்மை கம்பையாற்றில் வெள்ளநீர் வரும்போது சிவலிங்கத்தை தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாத்துனாங்களோ அதைப்போல திருமணமான புதுப்பெண், தன் கணவனையும் குடும்பத்தையும் எவ்வித இன்னல்களும் நேராமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.”
“ஓஹோ அப்படியா..!”
“திருமணத்தில தாலிகட்டி முடிந்ததும் புதுமணப் பெண்ணுக்கு பனைஓலை கூடையிலே நெல்லும் அதன்மேல காமாட்சியம்மன் விளக்கும் வைத்து ஏற்றி மணவறையை வலம் வரச் சொல்லுவாங்க.
“இதுக்கு மேல நான் சொல்றேன் தாத்தா ..! உமையம்மைக்கு எப்படி சிவபெருமான் நெல்லைக் கொடுத்து உழவைப்பெருக்கி அறச்செயல்களைச் செய்யச் சொன்னாரோ அதைப்போலவே, மணப்பெண்ணும் தன்னுடைய புகுந்த வீட்டில் முறையாக செல்வத்தைப் பெருக்கி, அறச்செயல்களைச் செய்யனும். சரிதானே..!”
“சரிதான். இப்ப சொல்லுங்க. காமாட்சியம்மன் விளக்குல என்னப் படம் இருக்கணும்..?”
“சிவபெருமானைப்போல பிறை நிலாவோடும் கிளி வைத்துக்கொண்டு கரும்போடு காமட்சி அம்மன் இருக்கணும்…! என அத்தனை பேரும் கோரஸாக கூறினார்கள்.
“இந்த நேரத்தில், கழுவி விளக்கப்பட்ட காமாட்சி அம்மன் விளக்கை உரிய மந்திரங்களைச் சொல்லி ஈசுவரி அம்மையார் ஏற்றினார். விளக்கின் ஒளியில் விளக்கிலிருந்த காமாட்சியம்மையின் புன்முறுவல் தெரிந்தது ; அந்த அறையிலிருந்த இருளும் விலகியது.