நவராத்திரி நாட்களில் சகல கலாவல்லி மாலை, அபிராமி அந்தாதி, சவுந்தர்ய லகிரி, லலிதா சகஸ்ரநாமம் ஆகியவற்றை தவறாமல் பாராயணம் செய்தல் வேண்டும். அது போல நவாவரண பூஜை, சுவாசினி பூஜை, கன்யா பூஜை ஆகியவற்றை செய்தல் வேண்டும். இது அளவற்ற பலன்களை அள்ளித் தரும்.
வேலை நிமித்தம் காரணமாக எல்லாராலும் இந்த பாராயணம், பூஜைகளை செய்ய முடிவதில்லை. இத்தகையவர்களுக்காகவே நமது முன்னோர்கள் அகண்ட தீபம் ஏற்றும் ஒரு வழி முறையை கூறி உள்ளனர்.
அகண்ட தீபம் என்பது விளக்கை தொடர்ந்து எரிய வைப்பது ஆகும். நவராத்திரி கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள் இதை செய்யலாம். தேவியை பூஜிக்கும் இடம் அருகில் ஒரு மரப்பலகையில் மூன்று கோணமாக சந்தனத்தால் கோடு போட்டு நடுவில் சந்தனம் குங்குமமிட்டு, பூ போட்டு அதன் மீது விளக்கு வைக்க வேண்டும். அம்மனுக்கு இடது பக்கம், வலது பக்கம் என இரு பக்கங்களிலும் விளக்கை ஏற்ற வேண்டும்.
ஒரு விளக்கு மண் அகல் விளக்காகவும் மற்றொன்று வெள்ளி அல்லது பித்தளை விளக்காகவும் இருக்கலாம். நவராத்திரி 9 நாட்களும் இந்த இரு விளக்குகளும் தொடர்ந்து எரிவது நல்லது.
இல்லையெனில் கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள் விடாமல் எரிய வேண்டும். நவராத்திரி முடிந்ததும் இந்த இரு விளக்குகளையும் தானமாக கொடுத்து விட வேண்டும். இந்த அகண்ட தீப வழிபாட்டால், சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.
கொலுமேடைக்கு பூஜை செய்வது எப்படி?
நூல் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும். குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை அம்பாளாக நினைத்து, தினமும் காலை, மாலையில் பூஜை செய்ய வேண்டும்.