தாலி பிரித்து கோர்த்தல்....!!

திருமணத்திற்கு பிறகு தாலி பிரித்து கோர்க்கும் சம்பிரதாயம் நடத்தப்படுகிறது. இது திருமணமான ஒற்றைப்படை மாதங்களில் (1,3,5) உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரை அழைத்து செய்யப்படுகிறது.
தாலி பிரித்து கோர்க்கும் நாளன்று திருமணத்திற்கு எடுத்து பட்டு புடவை மற்றும் வேஷ்டியை புதுமண தம்பதினர்கள் உடுத்திக் கொள்ள வேண்டும்.
அதன்பின் நல்ல நேரம் பார்த்து தம்பதினரை கிழக்கு முகமாக மணப்பாயில் உட்கார வைக்க வேண்டும்.
பின் மணப்பெண் கழுத்தில் இருக்கும் தாலிக்கு பதிலாக ஒரு மஞ்சள் கயிற்றை கட்டிய பிறகு, திருமணத்தின் போது மாப்பிள்ளை கட்டிய தாலியை அவிழ்த்து அதில் காசு, முத்து, பவளம், குண்டு, குழாய் போன்றவை அதனுடன் சேர்த்து மஞ்சள் கயிறு அல்லது செயினுடன் சேர்த்து கட்டி விடப்படுகிறது.
அதன்பின் சுமங்கலி பெண்கள் ஒவ்வொருவராக வந்து தம்பதினரை மஞ்சள், குங்குமம் வைத்து ஆசிர்வாதம் செய்கின்றனர்.
பிறகு பெண்ணின் மாங்கல்யத்திற்கு பூ , மஞ்சள், குங்குமம் வைத்து எல்லோரும் அட்சதை தூவி ஆசிர்வாதம் செய்கின்றனர். பின்னர் நல்ல நேரம் முடிவதற்குள் ஆராத்தி எடுத்து முடித்து விடுகிறார்கள்.
புது செயினில் திருமாங்கல்யத்தை அணிந்துகொண்டபின், சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு, பழம், தேங்காய், புஷ்பம் இவைகளுடன் ஒரு ஜாக்கெட் துண்டு வைத்துக்கொடுக்கலாம். அவர்களுக்கு சாப்பாடு போட்டும் அனுப்பலாம்.
இன்னும் வசதியானவர்கள் சுமங்கலிகளுக்கு புடவையும் கொடுக்கலாம். இன்னும் சில வசதியற்ற முதியவர்களுக்கும் அன்னதானம் செய்யலாம். இப்படி செய்வதால், தானம் பெற்றுக்கொண்டவர்கள் மனமும் வயிறும் நிறைந்து உங்களை வாழ்த்துவார்கள். நீங்கள் எப்போதும் தீர்க்க சுமங்கலியாக வாழுவீர்கள்.
பிரித்து எடுத்த மஞ்சள் கயிறினை கண்ணில் ஒற்றி, பத்திரமாக வைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் குழந்தை பிறந்ததும் குழந்தைக்கு கட்டிவிடலாம். சிலர் பத்திரமாக வைத்திருப்பார்கள்.
இந்த சம்பிரதாயம் திருமணமான பெண் கர்ப்பமாக இருந்தால் செய்யமாட்டார்கள். அந்த சமயத்தில் பெண்ணுக்கு தாலி பிரித்து கோர்க்க கூடாது. அதனால் தான் இதை மூன்று அல்லது ஐந்து மாதங்களில் செய்து விடுகின்றனர். சிலர் பதினைந்து நாட்களிலும் இதை செய்து விடுகின்றனர்.